Tag: சுத்தாத்வைத_சைவசித்தாந்தம்

  • Śivapunya Teḷivu: A Compendium of Offerings to Śivabhaktas and Their Benefits

    Śivapunya Teḷivu: A Compendium of Offerings to Śivabhaktas and Their Benefits


    TaHiEnFrEs

    சிவபுண்ணியத்தெளிவு என்னும் நூலில் கண்டபடி சிவனடியார்களுக்கு கைங்கர்யம் அளிக்கும் பொருட்களும் அதன் பயன்களும்.

    1. கௌபீனம் (கோவணம்) – ஆயிரம் கோடியுகம் சிவலோக வாசம்
      (தெளிவு 125)
    2. கம்பளம் – கம்பளத்தில் உள்ள ஒவ்வொரு
      முடிக்கும் ஒரு கழஞ்சு பொன்
      கொடுத்த பலன் (தெளிவு 126)
    3. புலித்தோல் (அ) மான்தோல் – கம்பளத்திற்குச்சொன்ன பலன்.(தெளிவு 127)
    4. சாமரம், அரிசி, மலர், கனி, தீபம்
      முதலியன – ஒவ்வோர்
      அரிசிக்கும்
      மலருக்கும்
      ஆயிரம் யுகம் சிவபுரத்தில் வாசம்.(தெளிவு 90,91)

    5.சிவலிங்கம் – ஆயிரம்
    கற்பம் சிவலோகவாசம்.
    (தெளிவு 95)

    6.சிவாகமம் – அறியாக் குழந்தைப் பருவம் முதல் செய்த
    கொலைப் பாவங்கள் தீரும்
    (தெளிவு 117).

    1. பாடலம்(நண்பகலில் மலரும் ஒரு வகை மலர்)
      உற்பலம்(குவளை, செங்கழுநீர்ப் பூ, நீலோற்பலம், கருநெய்தல் போன்ற மலர்களைக் குறிக்கும்)
      முதலியன கலந்த
      சுகந்த நீர் – வருணன் பதம் (தெளிவு 132)

    8.கையில்
    அன்பளிப்பு – திருமால் உலகில் உறைதல்
    (தெளிவு 133)

    1. சுக்கு முதலிய
      மருந்துகள் – ஆயிரம் கோடி கற்பம் ஆதவன் உலகு
      (தெளிவு.134).
    2. நோயகல
      மருந்து – நூறுகோடி யுகம் சிவலோக வாசம்.
      (தெளிவு.135).

    11.விபூதிப்
    பெட்டி – தீர்த்தாடனம் செய்த பலன்(தெளிவு 136).

    1. சிவஞானிக்குச் சிவாகம தானம் – சிவானந்தம் பலன் (தெளிவு. 137).
    2. படிப்போர்க்கு ஆமகதானம் – சிவஞானம் பலன் (தெளிவு. 138)
    3. உருத்திராக்க
      மணிமாலை – உருத்திரன் உலகம் (தெளிவு. 139).

    ]5. கைத்தடியும்,
    குடையும் – மனைவியொடு மன்னராய்ப் பிறப்பர்
    (தெளிவு.140).

    1. பாதுகை(காலலணி ) – சிவபுரம் (தெளிவு 141).

  • The Descent of Śivajñāna: From Śrikantha to Meykandar

    The Descent of Śivajñāna: From Śrikantha to Meykandar


    TaHiEnFrEs

    ஸ்ரீகண்ட முதல்வரிடம் ஸ்ரீமத் ஆகமங்களெல்லாங் கேட்டருளிய நந்திபெருமான் ஸ்ரீகண்ட முதல்வரை வணங்கி நின்று, சிவாகமந்தோறுஞ் சரியை முதலிய நாற்பாதங்களுஞ் சிறுபான்மை வேறுவேறாகக் கூறப்பட்டன. அவற்றுள், உண்மையாவது இதுவென்று அருளிச் செய்ய வேண்டுமென இரந்து விண்ணப்பஞ்செய்து வினாயவழிச், சீகண்ட முதல்வர் கருணை கூர்ந்து “நன்றே வினாயினாய்! அநந்ததேவர் எமக்கு அருளிச் செய்தவாறே கூறுகின்றோம்; கேட்பாயாக” என்றருளி,

    “கற்பந்தோறும் படைப்பு வேறுபாடுங் கேட்போர் கருத்து வேறுபாடும்பற்றி அவற்றிற்கு இயையச் சரியை முதலிய மூன்று பாதங்களும் ஆகமங்களின் வெவ்வேறாகக் கூறப்பட்டன. ஆகலான், அவற்றுள், எவ்வாகமத்தின்வழி யார் தீக்கை பெற்றார். அவ்வாகமத்தின் வழி அவர் ஒழுகற்பாலர். இனி, ஞானபாத மாவது பொருட்டன்மை உணர்த்துவதாகலான் அது பலதிறப்படுதல் பொருந்தாமையின், அவையெல்லாந் தூலாருந்ததி முறைமைபற்றிக் கூறப்பட்டன வன்றி மாறு கோளல்ல வென்பது வகுத் துணர்த்துதற்பொருட்டு, இரௌரவாக மத்துட் பன்னிரு சூத்திரத்தாற் கூறப்பட்டது சிவஞானபோதம் என்பதோர் படலம். அது கேட்டார்க்கு எல்லா வாகமப்பொருள்களும் மாறுகோளின்றி இனிது விளங்கும்” எனக் கூறி, அச்சிவஞானபோதத்தை நந்தி பெருமானுக்கு அருளிச்செய்தார்.

    நந்திபெருமானும் அது கேட்ட துணையானே எல்லா ஐயமும் நீங்கி மெய்ப்பொருள் தெளிந்து, பின்னர் அதனைத் தம் மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த சனற்குமார முனிவர்க்கு அருளிச் செய்தார். அவர் தம் மாணாக்கர் பல்ரோருள்ளுஞ் சிறந்த சத்தியஞான தரிசனிகளுக்கு அருளிச்செய்தார். அவர் தம்மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த பரஞ்சோதிமாமுனிகட்கு அருளிச் செய்தார். அவர் தமிழ்நாடு செய்த தவத்தானே திருவெண்ணெய் நல்லூரின் அவதரித் தருளி மெய்யுணர்வின் முற்றுப் பேறுடையராய் எழுந்தருளியிருந்த மெய்கண்டதேவர்பால் வந்து சிவஞான போதத்தை நல்கி, “இதனை ஈண்டுள்ளோர் உணர்ந்து உய்தற் பொருட்டு மொழிபெயர்த்துச் செய்து பொழிப்புமுரைக்க’ என்று அளித்தருளிப் பொழிப்புரைக்குமாறுஞ் சத்தியஞான தரிசனிகள்பால் தாம் கேட்டவாறே வகுத்தருளிச்செய்து நீங்க, அவரும் அவ்வாறே மொழிபெயர்த்துப் பொழிப்புரையுஞ் செய்தருளித், தம்முடைய மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த அருணந்தி குரவர்க்கு அளித்தருளினார். இது நூல் வந்த வரலாறெனக் கொள்க.

    ஸ்ரீமத் மாதவச் சிவஞான முனிவர் அருளிய சிவஞான மாபாடிய சிறப்புப்பாயிரப் பகுதியில் இருந்து…

  • The Supreme Nature of Śiva : The Distinction of Śiva from Trimūrti

    The Supreme Nature of Śiva : The Distinction of Śiva from Trimūrti


    TaHiEnFrEs

    சரம் அசரங்களாகிய உடம்புகளுக்கெல்லாம் சிவபிரான் உயிராதலாலும், உயிரையின்றி உடம்பு இயங்காமையாலும் தனக்கென ஒன்றில்லாதவராகிய சிவபெருமான் தான் போகியாயிருந்து உயிர்களுக்குப் போகங்களை ஊட்டியும், யோகியாயிருந்து உயிர்கள் யோகமாற்றி மெய்ஞ்ஞானம் உற்று உயர்சிவயோகத்தேகமாகி வீடெய்திடச்செய்தும் நிற்பர்.

    நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் யோகிருந்துழி வேட்கைக்குக் காரணமாகிய காமன் இருக்கவும் விட்டுணு முதலிய தேவர்கள் இன்பநுகர்ச்சியின்றி மெலிவுற்றதும், மாலயன் அம்மெலிவு கெடும்படி கருதிக் காமனை ஏவுதல்
    செய்ய அவனை நெற்றிக்கண்ணை விழித்தெரித்து உமாதேவியோடு அவ்வுயிர்களுக்குப் பேரின்பத்தை அருளிச்செய்ததுமாகிய இந்நிகழ்ச்சியே இதற்குச் சான்றென்க.

    இதற்குச்சுருதி,

    “போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதல் ஒரார்
    யோகியா யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார்
    வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரார்
    ஊகியா மூட ரெல்லாம் உம்பரின் ஒருவ னென்பர் .”

    சிவஞான சித்தியார்.

    இவ்வுண்மைகளைச் சிறிதுமறியாது நமது சிவபெருமானை மும்மூர்த்திகளோடு ஒருவனாக வைத்தெண்ணுவோரை நோக்கி

    “சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று
    நஞ்சம்அஞ்சி
    ஆவஎந் தாய்என் றவிதா விடும்நம்
    மவரவரே
    மூவரென் றேஎம்பி ரானொடும் எண்ணிவிண்
    ணாண்டுமண்மேல்
    தேவரென் றேஇறு மாந்தென்ன பாவந்
    திரிதவரே “

    என வாதவூரடிகளிரங்கிக் கூறிய திருவாக்குமறிக.

    மதுரை திருஞான சம்பந்த சுவரமிகள்‌ ஆதீன வித்துவான்‌ ஸ்ரீமத்‌ சுப்பிரமணியபிள்ளை அவர்கள் இயற்றிய சைவசித்தாந்த விளக்கம் என்னும் நூலில் இருந்து…

  • The Supreme Nature of Śiva Dharma: A Vedic Exposition

    The Supreme Nature of Śiva Dharma: A Vedic Exposition


    TaHiEnFrEs

    தேவர்கள் ஸ்ரீ நந்தியெம்பெருமானிடம், “நந்தியெம்பெருமானே ! சிவத்தியானக்கடலே! ? சிவதர்ம மகிமையை உரைத்தருளுங்களென்று கூற,

    அதற்கு நந்திதேவர் கூறுகின்றார்:

    ஓ தேவர்களே ! அப்புண்ணியத்தைக் கேட்பீர்களாயின் நீங்கள் பேராச்சரியமடைவீர்கள். சிவபூஜாமஹிமை யென்னுஞ்சாகரத்தில் ஓர் சிறிய பிந்துவைக் கூட நீங்களறிந்திலீர். தவத்தால் சித்தகந்தர்வ வித்தியாதரர்களானீர்கள். சிவப்பிரபாவமெனும் ரத்னங்களுக்குச் சிவன் சமுத்திரம் போன்றவராதலால் சிவனே தனது தத்வத்தை யறிவாரன்றி யேனையோர் அறிவதற்கில்லை. நாங்கள் அவர்களுடைய பிரசாதத்தில் ஓர் லேசமே அறிந்தோம். அஃது அப்படியிருக்க மற்றவர்கள் அவரது மகிமையை யறியமுடியுமா? அபூர்வமாகிய ரத்னங்களைச்சம்பாதித்து ஒருவன் தனது வீட்டில் வைத்துக்கொண்டிருப்பதா யெண்ணிக்கொள்வோம். அவ்விரத்னங்களின் மகிமையை யவனறிவானேயன்றி மற்றவெரெவ்வித மறிவார். ரத்னதத்வத்தை அதன் பரீக்ஷகனே யறிவான். எல்லோருமறிவதற்கில்லை. தாக்ஷாயணி வல்லபராகிய அவ்விறைவனே நித்யன், சர்வக்ஞனாதலால் அவனே இத்தத்வத்தையறிவான்.

    ஓ தேவர்களே! சிவ தர்மமெனும் ரத்னம் ரகஸ்யமாய்ச் சாக்கிரதையாய்க் காப்பாற்ற வேண்டியது, அது மிக்க பக்தனுக்கே கொடுக்கவேண்டியது, ரசம் அற்பமாயினும் அபாரமாகிய லோகத்தையும் ஸ்வர்னமாக்குகிறது. அக்னி லேசமாயினும் அது மலைபோன்ற பஞ்சைச் சாம்பராக்குகின்றது. ஔஷதம் சிறிதாயினும் அதனால் மகாவியாதி தொலைகின்றது. கத்தி சிறிதாயினும் கூர்மையாயிருந்தால் பெரிய தேகத்தின் விநாசத்திற்கும் ஹேதுவாகின்றது. இதுபோலவே சிவதர்மம் அற்பமாயினும் பாவமெனும் பெருமலையைப் பொடிப்பொடியாய் உருவிலாமற் செய்து புண்ணியத்தையும் சம்பத்தையும் வளரச் செய்கின்றது. தர்மங்களுக்குள் உத்தம தருமமானது சிவதருமமொன்றே.

    சாம்பவனும் மஹாதேவனுமாகிய சதாசிவனே சர்வதேவ சிகாமணியாய் உள்ளவரென்று கூறுவது போலச் சிவதர்மமே சர்வதர்ம மணியாயுள்ளதென்று வேதங்கூறுகின்றது. சிவதர்மத்திலும் மேலாகிய தருமம் வேறொன்றில்லை இது சத்யம் சத்யம் சத்தியமென்று கைதூக்கிக் கூறுகின்றேன். சிவதர்மத்துக்கு வேறாகிய தருமங்களெல்லாம் தருமாபாசமேயாம். ஓ சுரர்களே! அப்படிப்பட்ட சிவதருமத்தை ஆச்ரயிப்பதினால் யாது பயன்? சிவதருமங்களையறியாது உலகில் ஏனைய தருமங்களையே அநுஷ்டிக்கின்றனர். அதனால் யாது பயனடையக்கூடும்? ரத்னமென்று பிரமித்து வளையற்கற்களை வாங்குவானாயின் அதனால் சிறப்பு உண்டா? அன்றியும் தேவாதிதேவனான இறைவனுக்கு எது பிரியமோ அது தான் மேலாகிய தர்மம். அஃதொழிந்த சதாசாரமுதலிய வெல்லாமப்படியல்ல.

    அறிந்து சிவதர்மஞ் செய்தால் இதன் பயன் வேதங்களாலுங் கூறமுடியாது. அறியாது செய்த சிவபூசையும் சகலாபீஷ்டங்களையுங் கொடுப்பதாகுமென்று சகல வேதங்களுடைய கருத்து. இச்சிவபுண்ணியத்தினால் சிவகணத்தன்மை பெற்று சிவனுக்கு மிக்க பிரீதிகரனாயிருப்பான். தருமங்களுள் உத்தமமான தர்மமானது சனாதனமாகிய சிவதருமமொன்றே.

    சிவரகசியம் மூன்றாம் அம்சம் முப்பதாவது அத்தியாயத்தில் உள்ள சிவதர்ம மஹிமை உரைத்த பகுதியில் இருந்து…

  • The Role of Birth in Soul’s Liberation: A Saiddhāntika Explanation

    The Role of Birth in Soul’s Liberation: A Saiddhāntika Explanation


    TaHiEnFrEs

    கடவுள் உயிர்களுக்கு ஏன் பிறப்பைக் கொடுத்தார்? பிறப்பைக் கொடுக்காமல் இருந்தால் உயிர்கள் துன்பத்திற்கு ஆளாகாமல் இருந்திருக்குமே?

    உயிர்கள் அறிவுடையன. அவ்வறிவு அநாதியே – இயல்பாகவே ஆணவமல சத்தியால் மறைக்கப்பட்டிருந்தது.அறிவுடைய உயிர் சிவானந்தத்தைப் பெறுவதற்கு உரியது.அது சிவானந்தத்தைப் பெற முடியாமல் கிடக்கிறதே என்று உயிர்கள் மேல் பெருங்கருணை கொண்டு சிவபெருமான் உயிர்களுக்குப் பிறப்பைக் கொடுத்தார்.

    பிறப்பைக் கொடுக்காமல இருந்திருந்தால் உயிர்கள் ஆணவமல மறைப்பிலேயே கிடக்கும்.அதுவும் அதற்குத் துன்பந்தானே. துன்பம் என்று அறியாமலேயே துன்பத்துள் கிடப்பதும் துன்பமேயாகும்.

    கடவுள் கொடுத்த பிறப்பினால் துன்பம் மட்டும் உண்டாவது இல்லை.இன்ப அனுபவமும் கிடைக்கிறது.நல்வினை செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது.ஆணவமல மறைப்பிலிருந்து படிப்படியாக மெல்ல மெல்ல – விடுதலை பெரும் வாய்ப்பும் கிடைக்கின்றது.ஆதலின் பிறப்பினால் உயிர்கள் துன்பத்திற்கு மட்டுமே ஆளாகின்றன என்று கூறுவதற்கு இடமில்லை.

    முனைவர் ரா.வையாபுரி இயற்றிய கடவுள் சில கேள்விகள் – உயிர் சில சிந்தனைகள்(கட்டுரைத் தொகுப்பு) என்னும் நூலில் இருந்து…

  • The Fourfold Path of Jñāna: A Saiddhāntika Perspective On The Nature of Liberation

    The Fourfold Path of Jñāna: A Saiddhāntika Perspective On The Nature of Liberation


    TaHiEnFrEs

    ஞானம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகைப்படும். அறிதலொப்புமையால் நான்கும் ஞானமேயாம். ஆயினும் அரும்பு, மலர், காய், கனியாதல் போலச் சோபான முறையாகிய தம்முள் வேறுபாட்டான் முறையே ஒன்றற்கொன்று அதிகமாய் நான்காமெண்ணுக் கணின்ற ஞானமே முடிவாகிய ஞானமாம். இந்நான்கினும் அறிவு நுணுகி வர வர அறியாமையாகிய மலமும் அம்முறையே தேய்ந்து தேய்ந்து வரும். இவற்றின் பயனாகிய சாலோக முதலிய நான்கும் முத்தியேயாயினும் ஒன்றற்கொன்று ஏற்றமாய் இறுதிக்கணின்ற சாயுச்சியம் ஒன்றே முடிவாகிய முத்தியாகும்.

          மேற்கூறப்பெற்ற நான்கும் கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டை எனவும் பெயர் பெறும். ஞான நூல்களை ஞானசிரியன் பால் ஓதல் கேட்டல் பிறர்க்கு ஓதுவித்தல் கேட்பித்தல் என்பன கேட்டலாகும். தானும் உடனாயவரோடும் அப்பொருளைச் சிந்திப்பது சிந்தித்தலாம். இவ்வாறு கேட்ட காலத்து முதல்வனியல்பு பொருட்டன்மை பற்றிப் பேதமாய்த் தோன்றிச் சிந்தித்தகாலத்து அபேதமாய்த் தோன்றும். இவ்விரண்டுமின்றி நேரியனும் பரியனுமாயதோர் முறைமை பற்றி எவற்றினும் ஒற்றித்து நின்றே ஒன்றினும் பற்றிலனாய் வேறு தோன்றுவது தெளிதலாம். இவ்வாறு அவனோடு ஏகனாகி நிற்க ஏகதேசச் செலவு இன்றாய் ஒழியும். நிட்டையாவது கரணங்களின் வயத்தனாதலின்றி மேலங்ஙனந் தோன்றிய இறைவனது வியாபகத்தைத் தலைப்பட்டு ஒருவாற்றுனுங் குறைவின்றி இம்மையே சீவன்முத்தனாகி மாசுநீங்கிய வழி ஆடையின் வெண்மை ஆடை முழுதும் விளங்கினாற் போல, இங்குளி வாங்குங் கலம் போலுழல்வதாகிய இவ்வுடம்பு நீங்கப் பெறும் பரமுத்தி நிலையில், வியாபகமென்னும் அறிவு விளங்கப் பெற்று முதல்வனோடு ஒத்து நிற்பன் என்பதாம்.

          இவ்வாறு இருவினையொப்பால் சத்தமாதி விடயத் தன்னியன் பற்று நீங்கும். சத்திநிபாதத்தால் போக போக்கியக் கருவிகளின் செறிவு கழியும். குருவருளால் உருக்கழியும், தீக்ஷையால் சஞ்சித வினை கழியும். ஞான சாதனத்தால் எல்லா யோனிகளிலும் புக்குழல்தல் கழியும். ஞானப் பெருக்கத்தால் பாச அறிவிச்சை செயல்கள் கழியும். இறைவனது ஞான சத்தியால் அநாதி மறைப்பாகிய ஆணவமலமும் வாதனைபற்றி நிகழும் ஆகாமிய வினையும் ஒழியும். கிரியா சத்தியான சஞ்சித வினைக்குப் பற்றுக்கொடுத்து நிற்கும் முன்னிலையாகிய மாயேய மலமும் ஒழியும். உடம்பு முகந்து கொண்ட பிராரத்த கன்மம் அநுபவத்தால் ஒழியும். மும்மல நீக்கத்தால் ஏக தேசத் தன்மை கழியும். வாதனை நீக்கத்தால் விடயந் தன்னியன் நுகர்வது கழியும்.

    இவ்வாறு சகல உபாதிகளும் கழிந்து சிவஞானம் விளங்கப் பெற்று மாணிக்கத்தைச் சார்ந்த படிகம் மாணிக்கமாய் ஒழியாது, மாணிக்கத்தின் ஒளியும் நிறமும் பெற்றுத் தன் ஒளி அதுவதுவாயடங்கி அம்மாணிக்கத்திற்குச் சமமாய் நிற்குமாறு போலத்  தன் குணம் அவையேயாய் அடங்கிப் பரமான்மாவே போல ஒற்றித்து நின்று அப்பரமான்வே தனக்கு விடயமாக அயராவன்பு செய்து சிவாநந்த அநுபவம் பெற்று அந்நிலையிலும் மீளா அடிமையே என்று திருவருள் கண்ணாகத் (தன்முனைப்பின்றி) அநுபூதியிற் காண்பன்.

    ‘சித்தாந்த சைவம்’ என்னும் தலைப்பில் சித்தாந்த ஆசிரியர் சைவத்திரு த. சி. ச. இராமச்சங்கு பாண்டியன் ஐயா அவர்கள் வரைந்த கட்டுரையில் இருந்து ஒரு பகுதி…

  • Transcending the Cycle of Karma : Śiva’s Role in Destroying the Forest of Samsāra

    Transcending the Cycle of Karma : Śiva’s Role in Destroying the Forest of Samsāra


    TaHiEnFrEs

    அறம்பாவமென்னு மருங்கயிற்றாற்கட்டி = புண்ணிய பாவப்பயனென்னும் அரிய கயிற்றினாற்கட்டி.

    இதனால் பரமகருணாமூர்த்தியாகிய பரமேசுவரன் ஆணவவிருளில் அகப்பட்டுழலும் ஆன்மகோடிகளை ஆநந்தபரிதர்களாகச் செய்யத் திருவுளங்கொண்டு இருவினையென்னும் பாசக்கயிற்றினாற்கட்டி ஆட்டுவிக்கின்றானென்பதூஉம், அக்கட்டை அவிழ்க்கும்பேராற்றல் அவ்வமல பரமபதிக்கே இயல்பிலமைந்ததென்பதூஉம் பெறப்பட்டது.

    ஆகலின் எத்திறநற்பயனும் ஏகநாதனாகிய அம்புலியணிந்த பிரானருளாலன்றி ஆன்மாக்களுக்கு எக்காலத்தும் எவ்விடத்தும் அமையாதென்பது திண்ணம்.

    “இரு வினைப்பாசக்கயிற்றின் வழியாட்டுவிப்பானுமொருவனுண்டே தில்லையம்பலத்தே” என்றார் திருவெண்காட்டடிகள்.

    இவ்விரண்டு வினைப் பயன்களே ஒவ்வொரு ஆன்மாவையும் எந்தத்தநுவினும் நீங்காதுபற்றிப் பின்றொடர்ந்து செல்லுமாதலால் ” பற்றித்தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே” என்று மீளவும் அவரே வற்புறுத்தியரு ளினார்.
    சுவேதாசுவதர உபநிடதமும் “பராச்யாம்ச்ச சர்வர்ந் பரிணாமயேத்ய = பழைய வினைகளையெல்லாம் பக்குவப்பட்ட பருவத்துப் பரிணமிக்கும்படிச்செய்து அவைகளின் பயன்களையளிப்பான்.’ என்று கூறிப் போந்தது. அதனால் ஆன்மாக்களீட்டுஞ் சர்வகன்மங்களையும் அவரவர்களே ஏறாமலுங் குறையாமலும் புசிக்கும்படியூட்டி அவர்களுக்குச் சித்தசுத்தி பிறப்பித்து புலனொடுக்கி மனமடக்கித் தம்மையண்டித் தொண்டுபுரியும் புண்ணியப்பேறுவாய்த்த அவதரத்து,

    “ஸர்வஸம்ஸாரபேஷஜம் = சர்வ சம்சாரப் பிணிக்கு மருந்தினர்” என்று தரிசனோபநிடதமும் “சிவயேவஸதாத்யேயஸ் ஸர்வஸம்ஸார மோசக: = சிவபெருமானொருவரே சதா தியானிக்கற் பாலர். சர்வ சம்சார பந்தங்களும் நிவிர்த்தியாகும்பொருட்டு” என்று சரபோபநிடதமும் அறைந்தபடி அவர்களது சம்சாரமென்னுங் கடுங்கானகத்தைக் கொளுத்துங் காட்டுத்தீயைப்போல் பிரகாசித்து நிற்பவன் கருணாநிதியாகிய எம் கண்ணுதற்பிரானென்பது வெளிப்பட்டது. அவனுக்கே வைத்தியநாதன் என்னும் நாமமுண்டு.

    ஸ்ரீலஸ்ரீ சிவ அருணகிரி முதலியார் அவர்கள் இயற்றிய திருவாசக விஷயசூசனம் என்னும் நூலில் இருந்து…

  • The Divine Compassion of Śiva: Ācāryas Revealing the Essence of Vedas and Āgamas through Tirumurai and Meykanda Śāstras

    The Divine Compassion of Śiva: Ācāryas Revealing the Essence of Vedas and Āgamas through Tirumurai and Meykanda Śāstras


    TaHiEnFrEs

    ஸ்ரீமத் வேதாகமங்களைக் கற்றுத் தெளிந்துணர, ஒருவனுடைய முழு ஆயுட்காலமும் போதாதபடி, அவை அளவாற் பெருகியிருக்கின்றனவாதலின், கருணைக்கடலாகிய சிவபெருமான், நம்மீது வைத்த பெருங்கருணையினால், சமயக்குரவர்களும், சந்தான குரவர்களும் ஆகிய ஆசாரிய மூர்த்திகளை இந்நிலவுலகில் அவதரிக்கச் செய்து, அவர்கள் வாயிலாகத் திருமுறைகளையும் மெய்கண்ட நூல்களையும் வேதாகம சாரமாக நமக்கு வழங்கியருளினார். இவ்வருளாசிரியன்மார்கள், சீவபோதம் கழன்று சிவபோதமயமாகி நின்றவர்கள் ஆதலின், இவர்களது திருவாக்கு நம்மனைய பசுவாக்குகள் போலாகாது, பதிவாக்காகவே கொள்ளப்பெறும்.

    தருமையாதீனப் புலவர் வயிநாகரம் திரு.வே. இராமநாதன் செட்டியார் அவர்கள் ‘திருமுறைகளும் மெய்கண்ட நூல்களும்’ என்னும் தலைப்பில் வரைந்த கட்டுரையின் ஒரு பகுதி…

  • The Metaphysics of Śiva’s Immanence and Transcendence: Vyāpti, Sakalatva, and Asangatva

    The Metaphysics of Śiva’s Immanence and Transcendence: Vyāpti, Sakalatva, and Asangatva


    TaHiEnFrEs

    மாணவன் : இறைவன் என்னோடு ஒன்றாய் வேறாய் உடனாய் இருக்கிறான் எனில் நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களையும் சிவபெருமானும் அனுபவிப்பானா?

    ஆச்சாரியர் : மாணவனே !
    உன் வயிற்றில் எத்தனையோ புழு பூச்சிகள் கிடந்து உழலுகின்றன.

    அந்த புழு முதலிய சிற்றுயிர்கள் அடைகிற இன்ப துன்பங்களை உன்னுடைய வினைப்பயன் என்று நீ எந்தக் காலத்திலாவது கருதி இருக்கிறாயா ?
    கருதுவது இல்லை தானே?

    அந்த சிற்றுயிர்கள் படும் இன்ப துன்பங்களை நீ அனுபவிப்பது உண்டா ? இல்லை தானே ?

    அது போலத்தான் இறைவனும்.

    சிவ வியாபகத்தின் கீழ் உள்ள உயிர்கள் அனுபவிக்கிற இன்ப துன்பங்களை சிவபெருமான் ஒரு பொழுதும் தான் அனுபவிப்பதில்லை.

    அவன் உயிர்களோடு ஒன்றாய் வேறாய் உடனாய் இருக்கிறான்.

    உயிருக்கு உயிராய் இருந்து உயிர்களைப் பிரிப்பின்றிக் கூடி நிற்கின்றான்.

    ஆயினும் அவற்றின் தன்மை அவனை பற்றாதவாறு நிற்பதால் உயிர்களது இன்ப துன்ப வாதனைகள் எவற்றையும் சிவபெருமான் பற்றுவது இல்லை என்று அறிவாயாக.

    இப்படியாக இறைவன் பற்றற்றவனாய் இருக்கிறான் என்று திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் தனது திருக்களிற்றுப்படியார் எனும் மெய்கண்ட சாத்திரத்தின் 87 ஆவது பாடலில் விளக்கியருளிச் செய்திருக்கிறார்.

    அப்பாடல்,

    உன்னுதரத் தேகிடந்த கீடம் உறுவதெல்லாம்
    உன்னுடைய தென்னாய்நீ உற்றனையோ – மன்னுயிர்கள்
    அவ்வகையே காண்இங் கழிவதுவும் ஆவதுவும்
    செவ்வகையே நின்றசிவன் பால்.

    நன்றி : மாபாடிய உரைவகுப்புக்குழு.

  • The Spiritual Importance of Śiva’s Abodes

    The Spiritual Importance of Śiva’s Abodes


    TaHiEnFrEs

    சிவபெருமான் அநேக ஸ்தலங்களில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கிறதற்குக் காரணமென்ன?

    தேசங்கள் பலவாயிருப்பதனால் அவ்வாறு திருக்கோயில் கொண்டிராவிட்டால் மனிதர்களுக்குச் சிவதரிசனஞ் சித்திப்பது அரிது. பார்வதிதேவியார் பரமசிவத்தை நோக்கிப் பலவிடங்களில் திருக்கோயில் கொண்டு விற்றிருப்ப தென்னவென்று வினவினகாலத்துத் தேசங்கள் தோறும் பரவியிருக்கும் புண்ணியான்மாக்கள் அங்கங்குத் தரிசிக்கும் பொருட்டாக வீற்றிருப்பதாகப் சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.

    சிவபுண்ணியமுண்டாவதற் கேதுவாகிய சிவஸ்தலங்களின்னவென்று எவ்வாறு தெரியும்?

    சைவபுராணத்தில் உள்ள ஸ்தலபுராணங்களினாலும் தேவாரப்பதிகங்களினாலும் தெரியும்.

    ஸ்தலமென்பது தெய்வத்தை வணங்குவதற்கான ஓரிடந்தானே, சிவஸ்தலங்களின் விசேஷமென்னை?

    இவை ஏனைய மதஸ்தர்கள் தங்களிஷ்டப்படிக் கட்டுகின்ற கோயில்போலன்றாம். ஒவ்வொரு ஸ்தலமும் மானதபூஜையின் உண்மையை விளக்கிச் சிவஞானத்தையுண்டாக்குங் கருவியாயிருத்தலையறிக. அவ்வாறே உத்ஸவங்களும் பஞ்சகிருத்தியங்களை யுணர்த்துவனவாம்.

    சைவவினாவிடை நூலில் உள்ள ஸ்தலவியல் பகுதியில் இருந்து…