An Examination of the Padana and Bheda Schools of Saivam


TaHiEnFrEs

ஆணவந்தான் அநாதிஅந்த மடையா தாகும்
அடையின்அந்த ஆன்மாவும் அழியுமெனிற் செம்பிற்
காணலுறுங் களிம்பிரத குளிகைபரி சிக்கக்
கழியுஞ்செம் புருநிற்கக் கண்டோ மன்றே
தாணுவின்தன் கழலணையத் தவிரும்மலந் தவிர்ந்தால்
தான்சுத்த னாயிருக்கை முத்திஅரன் தாளைப்
பூணவேண் டுவதொன்று மில்லையெனின் அருக்கன்
புகுதஇருள் போம்அடியிற் பொருந்தமலம் போமே

சிவஞான சித்தியார்.

(கொ-டு) இரத குளிகை பரிசிக்கச் செம்பில் காணலுறு களிம்பு கழியும் எனவும், மலம் தவிரும் எனவும், பொருந்தவே மலம் போம் எனவுங் கூட்டுக.

(பொ-ரை.) முற்கூறிய ஆணவமலம் அநாதி நித்தமாதலால், முத்தியில் அது அழிவதில்லை. அழியுமாயின், அநாதி
நித்தமாகிய ஆன்மாவும் அழியுமெனப்பட்டு இரு பொருளும் நித்தமென்பது இழுக்காய் முடியும். ஆதலின், முத்தி நிலையினும் சகசமாகிய ஆணவமலம் நீங்குமாறில்லை என்பர் பாடாணவாதசைவர்.

மலத்தோடு கூடி அறியாமையாய் அடங்கியிருத்தலின் பாடாணவாதியெனப் பட்டார். பாடாணம் என்பது கல். அநாதியாகிய செம்பினிடத்து அநாதியாயுள்ள களிம்பு இரதகுளிகை பரிசித்த மாத்திரத்தில் நீங்கி அச் செம்பு பொன்னுருவாய் நிற்கக் காண்பது போல், இறைவன்றிருவடியாகிய மெய்ஞ்ஞானஞ் சார்ந்த மாத்திரையே உயிரோடு சகசமாய் நின்ற ஆணவமலம் நசிக்கும்; நசிக்கவே உயிர் ஆணவமலத்தின் வேறாய்ச் சிவமாய் நிற்றற்கு இழுக்கில்லையாதலின் அப்பாடாணவாத சைவர் மதம் பொருந்தாது.

இனி மலம் நீங்கப் பெற்ற மாத்திரையே மெய்ஞ்ஞானம் சாரும். அதுவேமுத்தி; மலம் நீங்கியதன் மேலும் திருவடியடைதல் வேண்டா மென்பர் பேதவாத சைவர். இவர் சிவனோடு கலவாமையின் பேதவாதி எனப்பட்டார். இருள் நீங்கிச் சூரியனொளி பிரகாசித்த விடத்தும் சூரியனொளியோடு கண்ணொளி கலந்தால் இருள் நீங்கும். கலவாது இமைகளால் மூடப் பெற்றிருப்பின் கண்ணுக்கு இருள் நீங்காதவாறு போல, ஆன்மாவின் அறிவுக்கு மெய்ஞ்ஞானம் பிரகாசித்து ஆன்மா இறைவனுடன் கலந்தால் மலம் பற்றறக் கழியும். இன்றேல் ஆன்மாவினிடத்து மலம்‌ பற்றறக்‌ கழியாது: ஆதலால்‌, அப்‌ பேதவாத சைவர்‌ மதமும்‌ பொருந்தாது. (எ-று)

சிவஶ்ரீ அருணந்தி சிவாசாரியர் அருளிச்செய்த சிவஞானசித்தியார் சுபக்கம் மூலமும்,உரையும்(1926) என்னும் நூலில் இருந்து…

(இதற்கு திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிட மாபாடிய கர்த்தராகிய மாதவச் சிவஞானயோகிகள் அருளிய உரையைத் தழுவி, திருவாவடுதுறை ஆதீன சைவப் பிரசாரகரும் தேவகோட்டை சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கத்துச் சித்தாந்த சாத்திர போதகருமாகிய,தூத்துக்குடி பொ.முத்தைய பிள்ளை எழுதிய பொழிப்புரை)