ஸ்ரீ பஞ்சாக்ஷர செபத்தாற் பயன் என்ன?
ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னு முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின், விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தாற் போல, ஆன்மாவினிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நீங்கும்படி ஞானானந்தத்தைப் பிரசாதித்தருளுவர்.
சிவபெருமானை ஆன்மாக்கள் வழிபடும் இடங்கள் எவை?
சிவபெருமான், புறத்தே சிவலிங்க முதலிய திருமேனிகளும் குருவுஞ் சங்கமமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், ஆன்மாக்கள் அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம்.
சிவபெருமான் இவ்விடங்களின் நிற்பர் என்றது அவர் எங்கும் வியாபகர் என்றதனோடு மாறுபடுமன்றோ?
மாறுபடாது; சிவபெருமான், எங்கும் வியாபகமாய் நிற்பினும், இவ்விடங்களின் மாத்திரமே தயிரில் நெய் போல விளங்கி நிற்பர்; மற்றை இடங்களிலெல்லாம் பாலில் நெய் போல வெளிப்படாது நிற்பர்.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் இயற்றிய சைவவினாவிடை தொகுப்பு என்னும் நூலில் இருந்து…