Guru Tattvasya Mahatvam – The Significance of Guru Worship in Śaiva Siddhānta


TaHiEnFrEs

தீவினையாளர் சம்பந்தத்தானே ஒருவன் எங்கனம் பதிதனாகின்றானோ அங்ஙனமே குருவின் சேர்க்கையால் புண்ணிய பலன்களை அடைகின்றான்.

தீயின் சேர்க்கையானே பொன்னானது களிம்பைப் போக்கிக் கொள்வதேய்ப்ப, குருவழிபாட்டானே மனிதர்கள் பாவங்களைக் கழிக்கின்றார்கள். நெருப்பின் அண்மையிலுள்ள நெய்க்குடம் எங்ஙனம் இலயமடைகின்றதோ, அங்ஙனமே குருவின் அண்மையிலிருப்பவன் தன் பாவங்கள் யாவும் இலயமடையப்பெறுவான். கொழுந்துவிட்டெரியும் நெருப்பானது உலர்ந்த விறகுகளை எங்ஙனம் எரிக்குமோ, அங்ஙனமே மேலாம் உவகைப்பாட்டி கையுடைய இந்தக் குரவனும் சீடன்றன் பாவங்களைக் கணப்போதிலே தகிக்கின்றான். 

மனம், வாக்கு, காயம் என்ற மூவகைக் கரணங்களாலும் குருவைப் பிழைத்தலாகாது. அவருடைய சினத்தானே ஆயுளும், வெறுக்கையும், மெய்யுணர்வும், நற்றொழில் எனப்படூஉம் புண்ணியங்களுஞ் சுடப்படுகின்றன என்று உரைத்தலானே, ஆயுள், செல்வம், தத்துவ உணர்ச்சி, புண்ணியங்கள் என்னும் இவைகள் மேன்மேலும் வளருமாறும், மலவிருள் தேயுமாறும் நன்னெறி காட்டி உய்வித்த குருசெய்த நன்றியை எஞ்ஞான்றும் மறவாது, மனம் வாக்குகள் ஒருமைப்படக் காயத்தினால் அவரை வணங்குதலும் இன்றி அமையாது வேண்டப்படுமாதலானும்,

यं यं लोकं मनसा संविभाति विशुद्धसत्त्वः ।

कामयते याञ्च कामान् तन्तं लोकं जयते ।

ताञ्च कामान् तस्मादात्मज्ञं ह्यर्चयेत् भूतिकामः ।।

யம் யம் லோகம் மனஸா ஸம்விபா⁴தி விஶுத்³த⁴ஸத்த்வ꞉ |

காமயதே யாஞ்ச காமான் தந்தம் லோகம் ஜயதே |

தாஞ்ச காமான் தஸ்மாதா³த்மஜ்ஞம் ஹ்யர்சயேத் பூ⁴திகாம꞉ ||

எவன் எவ்வெவ்வுலகினை மெய்யுணர்வானே எண்ணி

விசுத்த சத்துவமுடையனாகி, எவ்வெப்பயனை விழைகின்றானோ அவன் அவ்வவ்வுலகங்களை அடைந்து அவ்வப்பயன்களைப் பெறுகின்றான் ஆகலின், பரசிவனை உள்ளவாறு உணர்ந்த அத்தன்மையனாகிய சிவஞானியைத் திருவருட்செல்வம் விழைவுறூஉம் ஒவ்வொருவரும் பணிவாராக என வேதமகா வசனங்கள் முழங்குதலானும், அங்ஙனமே சிவாகமங்களாகிய பரவித்தைகளும் முழங்கலானும் குரவனே தெய்வமெனக்கொண்டு வணங்கியதெனக் கடைப்பிடிக்க.

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன வெளியீடான சிவஞானபோத மாபாடியத்திரட்டு(1977) என்னும் நூலில் இருந்து…