சிவபெருமானது உருவ வருணனை
நுதலது இமையா நாட்டம் – வான் இலங்கு பிறை அன்ன விலங்குவால் வைஎயிறு
அகநானூறு கடவுள் வாழ்த்து
எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடரும் சென்னி
யாழ்கெழு மணிமிடற்று அந்தணன்
செவ்வான் அன்ன மேனி
மார்பினஃதே மையில் நுண்ஞாண்
கொன்றைத் தாரன் மாலையன் கண்ணியன்
கையது கணிச்சி மழு வேல்
சேர்ந்தோள் உமையே வரிகிளர் வயமான் உரிவை உடுத்தவன் ஊர்ந்தது ஏறே
என்ற தொடர்களால் சிவபெருமான் நெற்றிக்கண்ணோடு முக்கண்ணனாய், செஞ்சடையனாய், பிறைசூடியாய், வேதம் ஓதுபவனாய், செம்மேனியின் மார்பில் பூணூல் அணிந்து, கொன்றை சூடி, கைகளில் கணிச்சி, மழு, வேல் இவற்றை ஏந்தி, அம்மையப்பனாய், ஏறு ஊர்பவனாய்ப் புலித்தோலாடையனாய்ச் சான்றோர்கள் உள்ளத்தில் காட்சி வழங்கும் செயல் கூறப்பட்டுள்ளது.
கறைமிடறு அணியலும் அணிந்தன்று சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப. நீர்அறவு அறியாக் கரகத்தன் (புறநானூறு -1)
நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் (ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து) என்பனவற்றால், அவன் விடக்கறைபொருந்திய நீலகண்டன், இடபக்கொடியன், நீர்நிறைந்த கமண்டலத்தோடு இருக்கின்றவன், பார்வதியைத் தன் உடம்பின் ஒரு கூறாகக் கொண்டுள்ளவன் என்ற செய்திகள் பெறப்படுகின்றன. பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாகக் கருதப்படும் மருட்பாவில்,
பொன்னார் எயில் எரி ஊட்டிய வில்லன் குறங்கு அறைந்த வெண்மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா ஈரணிபெற்ற எழில்தகையன் சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக்கடவுள் என அவன் வில்லும் சூலமும் பிடித்து, மணியையும் உடுக்கையையும் ஒலிப்பித்து, இரண்டு உருவிற்கு ஏற்ப ஈரணிகளால் அழகாகக் காட்சி வழங்கும் திறம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டைத் தமிழகத்தில் சிவன் என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரையில் திரு. தி.வே கோபாலையர்.