நீற்றாத் திருமேனி நெஞ்சறா அஞ்செழுத்து நிமலன் பூசைச் சாறறாத் தினப்பணிகள் தடையறாக் கருணை விழிசாரும் இன்சொல் பேற்றாச் சைவநெறி பெட்பறாப் பஞ்சகச்சம் பிறங்கு முந்நூல் வீற்றா அக்கமணி மிளிரும் ஈசானகுரு விரைத்தாள் போற்றி !
– புலவர்மணி சோமசுந்தரம்செட்டியார் .
சிவக்கடலில் திளைத்திடுவார் செய்ய திருவைந்தெழுத்தே திகழும் நாவார்
– தமிழ்க்கடல் இராய.சொக்கலிங்கம் செட்டியார் .
சுவைத் தமிழும் வடமொழியும் துய்த்துணர்ந்தார் வெண்ணீறு துதைந்த மெய்யார் தவத்துயர்ந்தார் தண்ணளியார் சிவபூஜைக்கு உறுதுணையார் தன்னேரில்லார் பவக்கடல் நின்று எமையேற்றும் ஈசான குரு பாதம் பணிந்து வாழ்வாம் !
நாவேறும் சித்தாந்த நல்லுரையும் சிவனருள்சீர்நண்ணும் நால்வர் பாவேறு மணமும் அவர் ஈசான ஞானகுரு பரனே நாளும் வேவேறும் ஈசனருள் பூசை நயம்பெறத் தந்தாய் சிறியேன் நெஞ்சப் பூவேறியிருந்து உன்னை மறவாத மனமும் நல்கப் போற்றுவேனே .
– தி.செ.முருகதாசய்யா , கௌமார மடாலயம் , திருவாமத்தூர் .
மான்காட்டி மான்பிடிக்கும் வாய்ப்பை நினைப்பூட்டி
– சைவத்திரு தத்புருஷ தேசிகரவர்கள்
ஊன்காட்டி – வான்காட்ட நம்போல் உருக்காட்டி வந்த ஈசான சிவ மாதேவன் பாதமலர் சிந்தனையால் சேரும்திரு .
யாக்கைகொடுத்து எமையிங்கே இவைநுகர்ந்து வருகவென எம்கரத்தில் நோக்கிருநான் குடையான்முன்பு எழுதும்எழுத் தினைஞான நோக்கம் செய்து பூக்குமலர்க் கரத்தாலே அழித்தென்றும் சிவபோகம் பொலியும் வண்ணம் தீக்கைபுரிந்து ஆண்டருளும் ஈசான சிவகுரவன் திருத்தாள் போற்றி போற்றி .