Categories
SuddhAdvaitham Saiva Siddhantham

Saiva Siddhantham –A brief description

சைவ சித்தாந்தம் – சுருக்கமான விளக்கம்

  1. உடலுக்கு வேறாக உயிர் என ஒரு பொருள் உண்டு.
  2. அந்த உயிருக்கு உள்ளாக இறைவன் என்னும் மற்றொரு
    பொருள் உண்டு.
  3. உயிர்ப்பொருள், உள்ளிருக்கும் இறைவன் உணர்த்துதல்
    வழியாகத்தான் தனது உடற் கருவிகளை இயக்கிக்
    கொண்டு இவ்வுலகில் வாழ்கிறது.
  4. உயிரின் உலகியல் வாழ்வுக்கு உடந்தையாக ஆணவம்,
    கன்மம், மாயை என்ற மும்மலங்கள் உள்ளன.
  5. திருவருளால் இவற்றைச் சார்ந்து உயிர்வாழும் கட்டம்
    அவ்வளவும் பந்த நிலை அல்லது பெத்த நிலை.
  6. திருவருளால் இவற்றின் தொடர்பு நீங்கிச் சூக்கும
    உணர்வாகிய ஞான உணர்வினால் கடவுளை அறிந்து
    அடைந்து அனுபவிக்கும் நிலை மோட்ச நிலை அல்லது சுத்த நிலை.
  7. இச்சுத்த நிலைப்பேறு ஒவ்வோருயிர்க்கும் உரியது. ஆனால்,
    அதனதன் பக்குவ காலத்தில் மட்டும் அதற்கதற்கு வாய்ப்பது.
  8. இவ்வகையிற் சம்பந்தப்படும் பொருள்கள் மூன்று. அவை
    பதி, பசு, பாசம் என்பன.
  9. இம் முப்பொருள் இயல்புகளை உரிய முறையிற்
    கற்றுக் கேட்டுத் தெளிபவர்களே மெய்ஞ்ஞானம் பெறுவர்.
    அவர்களே மேல்கதிக்கும் வீடு பேற்றிற்கும் உரியர்.
  10. வீடு பேறு என்பது உயிர் தன் சீவத்தன்மை கழிந்து
    சிவத்தோடு ஏகரசமாய் நின்று அநுபவிக்கும் ஆராத ஒரு
    பேரின்ப நிலை.

இவையும்‌ இவற்றின்‌ உள்‌ விரிவுகளுமே சைவசித்தாந்தம்‌ கூறும்‌ விஷயங்கள்‌. இவற்றை அறிவதன்‌ மூலம்‌ ஒருவன்‌ தன்னை அறிந்தவன்‌ ஆவான்‌. தன்னை அறியும்‌ அறிவும்‌ தலைவனாகிய இறைவனை அறிதலோடேயே நிகழும்‌. இந்த அறிவு நிலையே அறிவுக்கெல்லாம்‌ உயர்நிலை அறிவாகும்‌. இந்த அறிவு நிலையை எட்டாவிடில்‌ அறிவுக்குப்‌ பயன்‌ எதுவுமில்லை.

“கற்றதனாலாய பயனென்‌” என்ற செய்யுளின்‌ மூலம்‌ இக்கருத்து திருக்குறளில்‌ முத்திரீகரணம்‌ (முத்திரையிடல் ) செய்யப்பட்டிருக்கிறது.

சித்தாந்தச் செழும் புதையல்கள் என்னும் நூலில் பண்டிதர் மு.கந்தையா அவர்கள்.