Śiva as Aṣṭamūrti: The Eightfold Manifestation


TaHiEnFrEs

சிவபெருமான் அஷ்டமூர்த்தி :

நமது சமய ஆசாரிய சுவாமிகளான ஸ்ரீமத் மாணிக்கவாசகப்பெருமான் அருளிய திருவாசகத்தில்,

நிலம்நீர் நெருப்புயிர்
நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோ
டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்
உலகே ழெனத்திசை
பத்தெனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா
தோணோக்கம் ஆடாமோ

திருத்தோணோக்கம் – 5.

சிவபெருமான் ஒருவனே, நிலமும், நீரும் தீயும், வாயுவும், பெரிய ஆகாயமும், சந்திரனும் சூரியனும், அறிவுருவாய ஆன்மாவும் என்னும் எட்டு வகைப் பொருள்களாய் அவற்றோடு கலந்து இருப்பவனாய் ஏழுலகங்களும் திக்குகள் பத்தும் ஆகப் பல பொருள்களாக நின்றருளுகின்றான்.

உயிர் – காற்று. விசும்பு – ஆகாயம். நிலா – சந்திரன். பகலோன் – சூரியன். புலன் – புலம்; அறிவு; போலி. ஆன்மாவை, மைந்தன் என்றார், புருடன் என்னும் வடநூல் வழக்குப்பற்றி. ஐம்பூதம், இருசுடர், ஆன்மா என்னும் எட்டும் இறைவனுக்கு, அட்ட மூர்த்தம் – எட்டுரு எனப்படுதலின், எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் என்று அருளினார்.

மற்றொரு சமயாசாரியரான திருநாவுக்கரசர் பெருமானும் இவ்வாறே,

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாய்எறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாய்அட்ட மூர்த்தி யாகி (தி.6 ப.94 பா.1) என்று அருளிச்செய்தல் காண்க. `

ஈறாய்முத லொன்றாய்இரு பெண்ஆண்குணம் மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்
ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாய்உடன் ஆனான்இடம் வீழிம்மிழ லையே.

என்ற மற்றொரு சமயாசாரியரான திருஞானசம்பந்தப்பெருமான் திருமொழியை (தி.1 ப.11 பா.2) இங்கு உடன்வைத்து நோக்குக.

” ப்ருதிவ்யோ பவ; ஆபச்சர்வ; அக்நேருத்ர; வாயுர்ப்பீம; ஆகாஸஸ்ய மஹாதேவ; சூர்யஸ்ய உக்ர; சந்த்ரஸ்ய சோம; ஆத்மாந; பசுபதி: “