ஆன்மாக்களோ எண்ணில அவற்றின் தராதரங்களும் கணக்கில. தத்துவக்கூட்டங்களும் அப்படிப் பட்டவையே. இவற்றையெல்லாம் எப்படி அறிந்து தவறில்லாமல் கூட்டியும் பிரித்தும் சிவபெருமானால் செயல்புரியமுடியும் என்று நாம் எண்ணக்கூடும். சிவபெருமான் நிறைந்த ஞானமயன். அவனால் அறியப்படாதது எதுவும் இலது. அங்ஙனம் அறிந்து செயல் புரிவதனால் சிவபெருமானுக்கு அறிவுக்குறை நேரிடுவதில்லை. வாயுமண்டலத்துட்பட்டுள்ள உயிர்கள் சுவாசிப்பதனால் வாயுமண்டலம் வற்றிப்போவது இல்லை. நிறைந்த ஞானநிலபத்துட்பட்டிருக்கும் உயிர்கட்கு உதவிபுரிவதனால் சிவபெருமானுக்கு ஏதும் குறைவோ மாறுபாடோ ஒருபோதும் உண்டாவதில்லை, நிறைந்த ஞானம் குறைவுபடுவதில்லை என்பதை ‘பொங்கு ஒளி ஞானம்’ என்ற சிவப்பிரகாசம் தொடர்காட்டும். அத்தகைய ஞானப் பொருள் என்றும் நீக்கமற நிற்பது.
மேற்கூறப்பட்டபடி, பேரறிவுப்பொருள் உதவி புரிதலால் என்னபயன் ஆன்மாவுக்கு ஏற்படும் என நாம் கருதக்கூடும். சிவம் இங்ஙனம் துணைபுரிவதனால் ஆன்மாவுக்குள்ள மலமறைப்பு அகலலுறும். இதன் பயனாகப் பாசஞான பசுஞானங்கள் விலகலுறும். முற்றறிவு எனப்படும் சிவஞானம் விளைதலுறும். இவ்வாறான சிவஞானவிளைவினால், ஆன்மா, தன்னை – தன் இயல்பினை – அறியலுறும். இதனை ஆன்மதரிசனம் என்பர். இதனால் ஆன்மா மலநீக்கம்பெற்றுத் தூய்மை உறும். இதனை ஆன்மசுத்தி என்பர். இவற்றின்பயனாக ஆன்மா, உண்மைமுத்தி வாய்ப்புக்கான சீவன்முத்தித்திறம் இம்மையிலே வாய்க்கப்பெற்றிடும். இதனை ஆன்மலாபம் என்பர். இங்ஙனம் இம்மூன்று நலங்களைையும் நண்ணப்பெறுதலே இங்கு அதன்பயன் எனக்குறிக்கப்பட்டது.
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன வெளியீடான சிவப்பிரகாசம் சீர்மைக்கட்டுரை [மூன்றாஞ் சூத்திரம் – ஆன்ம இலக்கணம்](1966) என்னும் நூலில் இருந்து.