The Cosmic Role of Śiva


TaHiEnFrEs

சிவபெருமான் அடியவர்‌ அல்லலை அறுப்பவன்‌. இதனைச்‌ “சிறந்தடியார்‌ சிந்தனையுள்‌ தேனூறிநின்று, பிறந்த பிறப்பறுக்கும்‌ எங்கள்‌ பெருமான்‌” என்று திரு மணிவாசகப்பெருமான்‌ அருளிச்‌ செய்துள்ளார்‌. இச்செய்தியைக் கலித்தொகை

“ஆறறி அந்தணர்க்‌ கருமறை பலபகர்ந்து
தேறுநீர்‌ சடைக்‌ கரந்து திரிபுரந்‌ தீமடுத்துக்‌
கூறாமல்‌ குறித்ததன்மேல்‌ செல்லும்‌ கடுங்கூளி
மாறாப்போர்‌ மணிமிடற்‌ றெண்கையாய்‌ கேளினி”
(கடவுள்‌ வாழ்த்து)

என்று கூறுகின்றது. நான்முகனுக்கு நான்கு மக்கள்‌. சனகர்‌, சனந்தனர்‌, சனாதனர்‌, சனற்குமரர்‌ என்பார்‌. நால்வரும்‌ நற்‌ கலை பல கற்றும்‌ வீடுறுநெறியை விளக்கமாகக்‌ கண்டிலர்‌. எனவே சிவபிரானை அணுகினர்‌. அவன்‌ வாக்கிறந்த பூரணமாய்‌ மனத்துக்கப்பாலாய்‌ எல்லாமாய்‌ உள்ளதுமாய்‌ உள்ள பொருளை உணர்த்தினான்‌. அதனை எவ்வாறு உணர்த்தினான்‌? கரதலம்‌ மோன முத்திரையைக்‌ காட்டிச்‌ சொல்லாமல்‌ சொல்லியருளினான்‌. இதனையே

“ஆறறி அந்தணர்க்‌ கருமறை பலபகர்ந்து” என்றது. மதங்கொண்ட யானை யாவற்றையும்‌ அழிவு பண்‌ணும். அதைவயப்படுத்திப்‌ பயிற்சி தந்தால்‌ மக்கட்‌ பணிகளைச்‌ செய்யும்‌. அதுபோலக்‌ கங்கையாறு வீறுகொண்டு பாய்ந்தால்‌ உலகம்‌ நீறுபடும்‌. அதை துளியாக்கிச்‌ சடையிலே கரந்து அதன்‌ வீறு ஒழித்து நிலவுலகிற்‌ பாய்ந்து நலம்‌ பல விளையச்‌ செய்தான் பரமன்‌.

சிவபிரானே சருவ சங்காரகருத்தா என்பதைச் சரப உபநிடதம்‌ “யோந்தகாலே ஸர்வலோகாந்‌ ஜஹாரஸ ஏக ச்ரேஷ்டச்சஸர்வ” என்று கூறும்‌.

அடைந்தவர்க்கு அளி செய்‌யும்‌ அண்ணல்‌ அரன்‌, அதனையே நீலமணியொத்த அவனது மிடறு காட்டி நிற்கும்‌. கடலின்‌ தோன்றிய நஞ்சை எம்பிரான்‌ உண்டு உலகைக்‌ காவானேல்‌ யாவரும்‌ அழிந்திருப்பர்‌, இதனை

“பூரரோடும்‌ விண்ணோர்கள்‌ பறந்தோடப்‌ புரந்தரனார்‌ பதி விட்டோடத்‌ தேரோடும்‌ கதிரோட மதியோட விதியோடத்‌ திருமால்‌ மேனிக்‌ காரோடத்‌ தொடர்ந்தோடும்‌ கடல்விடத்தைப்‌ பரமனுண்டு காவா விட்டால்‌ ஆரோடும்‌ நீரிருப்பீர்‌ எங்கோடியுயிர்‌ பிழைப்பீர்‌ அறிவிலீர்காள்‌?”

என்று திருக்குற்றாலத் தலபுராணம்‌ கூறும்‌.

சிவஞான பூஜா மலரில்(1988) இருந்து…