ஸ்ரீகண்ட முதல்வரிடம் ஸ்ரீமத் ஆகமங்களெல்லாங் கேட்டருளிய நந்திபெருமான் ஸ்ரீகண்ட முதல்வரை வணங்கி நின்று, சிவாகமந்தோறுஞ் சரியை முதலிய நாற்பாதங்களுஞ் சிறுபான்மை வேறுவேறாகக் கூறப்பட்டன. அவற்றுள், உண்மையாவது இதுவென்று அருளிச் செய்ய வேண்டுமென இரந்து விண்ணப்பஞ்செய்து வினாயவழிச், சீகண்ட முதல்வர் கருணை கூர்ந்து “நன்றே வினாயினாய்! அநந்ததேவர் எமக்கு அருளிச் செய்தவாறே கூறுகின்றோம்; கேட்பாயாக” என்றருளி,
“கற்பந்தோறும் படைப்பு வேறுபாடுங் கேட்போர் கருத்து வேறுபாடும்பற்றி அவற்றிற்கு இயையச் சரியை முதலிய மூன்று பாதங்களும் ஆகமங்களின் வெவ்வேறாகக் கூறப்பட்டன. ஆகலான், அவற்றுள், எவ்வாகமத்தின்வழி யார் தீக்கை பெற்றார். அவ்வாகமத்தின் வழி அவர் ஒழுகற்பாலர். இனி, ஞானபாத மாவது பொருட்டன்மை உணர்த்துவதாகலான் அது பலதிறப்படுதல் பொருந்தாமையின், அவையெல்லாந் தூலாருந்ததி முறைமைபற்றிக் கூறப்பட்டன வன்றி மாறு கோளல்ல வென்பது வகுத் துணர்த்துதற்பொருட்டு, இரௌரவாக மத்துட் பன்னிரு சூத்திரத்தாற் கூறப்பட்டது சிவஞானபோதம் என்பதோர் படலம். அது கேட்டார்க்கு எல்லா வாகமப்பொருள்களும் மாறுகோளின்றி இனிது விளங்கும்” எனக் கூறி, அச்சிவஞானபோதத்தை நந்தி பெருமானுக்கு அருளிச்செய்தார்.
நந்திபெருமானும் அது கேட்ட துணையானே எல்லா ஐயமும் நீங்கி மெய்ப்பொருள் தெளிந்து, பின்னர் அதனைத் தம் மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த சனற்குமார முனிவர்க்கு அருளிச் செய்தார். அவர் தம் மாணாக்கர் பல்ரோருள்ளுஞ் சிறந்த சத்தியஞான தரிசனிகளுக்கு அருளிச்செய்தார். அவர் தம்மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த பரஞ்சோதிமாமுனிகட்கு அருளிச் செய்தார். அவர் தமிழ்நாடு செய்த தவத்தானே திருவெண்ணெய் நல்லூரின் அவதரித் தருளி மெய்யுணர்வின் முற்றுப் பேறுடையராய் எழுந்தருளியிருந்த மெய்கண்டதேவர்பால் வந்து சிவஞான போதத்தை நல்கி, “இதனை ஈண்டுள்ளோர் உணர்ந்து உய்தற் பொருட்டு மொழிபெயர்த்துச் செய்து பொழிப்புமுரைக்க’ என்று அளித்தருளிப் பொழிப்புரைக்குமாறுஞ் சத்தியஞான தரிசனிகள்பால் தாம் கேட்டவாறே வகுத்தருளிச்செய்து நீங்க, அவரும் அவ்வாறே மொழிபெயர்த்துப் பொழிப்புரையுஞ் செய்தருளித், தம்முடைய மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த அருணந்தி குரவர்க்கு அளித்தருளினார். இது நூல் வந்த வரலாறெனக் கொள்க.
ஸ்ரீமத் மாதவச் சிவஞான முனிவர் அருளிய சிவஞான மாபாடிய சிறப்புப்பாயிரப் பகுதியில் இருந்து…