The Divine Beauty of Śiva: A Description


TaHiEnFrEs

ॐ नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतए अंबिका पतए उमा पतए पशूपतए नमो नमः ||

ௐ நமோ ஹிரண்யபா³ஹவே ஹிரண்யவர்ணாய ஹிரண்யரூபாய ஹிரண்யபதயே அம்பி³கா பதயே உமா பதயே பஶூபதயே நமோ நம꞉ ||

“பொற்கையினர்க்கு, பொன்வண்ணர்க்கு, பொன்ரூபர்க்கு, பொற்பதிக்கு அம்பிகா பதிக்கு உமாபதிக்கு பசுபதிக்கு நமஸ்காரம்‌ ! நமஸ்காரம்‌ !! ” என்று தைத்திரீய ஆரணியகம்‌ கூறுகின்‌றது.

சிவபிரான்‌ திருமேனியைப்‌ பொன்னிறமுடையதென்று சுருதிகள்‌ கூற, அவற்றுக்கியைந்து திராவிடசுருதிகளும்‌ அங்கனம்‌ பொன்வண்ணர்‌ என்று கூறுதலோடமையாது, செம்‌ பவளவண்ணர்‌, மாணிக்கவண்ணர்‌, தீவண்ணர்‌ போன்றும் அங்கங்கே புகழ்வனவாயின.

ஸ்படிகமேனியர்‌, சங்‌கொத்தமேனியர்‌ என்றற்றொடக்கத்தனவாக அத்திராவிடசுருதிகள்‌ சிற்சில இடங்களிற்‌ புகழ்வது அவர்‌ செம்பவளமேனியிற்‌ படிந்திருக்கும்‌ விபூதியின்‌ வெண்ணிற மிகுதிப்பாடு பற்றியாம்‌.

‘ பொன்நேர் தருமே னியனே புரியும்
மின்நேர் சடையாய் விரைகா விரியின்
நன்னீர் வயல்நா கேச்சுர நகரின்
மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே.’

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருநாகேச்சரத்து தேவாரம்.

மாசில் தொண்டர்மலர் கொண்டுவ ணங்கிட
ஆசை யாரவரு ணல்கிய செல்வத்தர்
காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம்
ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருக்கருகாவூர்‌ தேவாரம்.

‘வம்பல ரும்மலர்க் கோதைபா கம்மகிழ் மைந்தனும்
செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி செல்வனும்
கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திருக் கோட்டாற்றுள்
நம்பனெ னப்பணி வார்க்கருள் செய்யெங்கள் நாதனே’.

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருக்கோட்டாறு தேவாரம். ,

ஏவணத்த சிலையால்முப் புரமெய் தான்காண்
இறையவன்காண் மறையவன்காண் ஈசன் தான்காண்
தூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண்
சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கொண்டான் தான்காண்
ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண்
அனலாடிகாண் அடியார்க் கமிர்தா னான்காண்
தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண்
திருவாரூ ரான்காண் என்சிந்தை யானே.

திருநாவுக்கரசர் பெருமான் அருளிய திருவாரூர் தேவாரம்.

பொன்னார் மேனியனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருமழபாடி தேவாரம்.

‘மருவார் கொன்றை மதிசூடி
மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு
மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந்
தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே’

ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்கடவூர் மயானத்து தேவாரம்.

காசிவாசி சாம்பவஸ்ரீ செந்திநாதையர் இயற்றிய தேவாரம் வேதசாரம் என்னும் நூலில் இருந்து…