ஞானம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகைப்படும். அறிதலொப்புமையால் நான்கும் ஞானமேயாம். ஆயினும் அரும்பு, மலர், காய், கனியாதல் போலச் சோபான முறையாகிய தம்முள் வேறுபாட்டான் முறையே ஒன்றற்கொன்று அதிகமாய் நான்காமெண்ணுக் கணின்ற ஞானமே முடிவாகிய ஞானமாம். இந்நான்கினும் அறிவு நுணுகி வர வர அறியாமையாகிய மலமும் அம்முறையே தேய்ந்து தேய்ந்து வரும். இவற்றின் பயனாகிய சாலோக முதலிய நான்கும் முத்தியேயாயினும் ஒன்றற்கொன்று ஏற்றமாய் இறுதிக்கணின்ற சாயுச்சியம் ஒன்றே முடிவாகிய முத்தியாகும்.
மேற்கூறப்பெற்ற நான்கும் கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டை எனவும் பெயர் பெறும். ஞான நூல்களை ஞானசிரியன் பால் ஓதல் கேட்டல் பிறர்க்கு ஓதுவித்தல் கேட்பித்தல் என்பன கேட்டலாகும். தானும் உடனாயவரோடும் அப்பொருளைச் சிந்திப்பது சிந்தித்தலாம். இவ்வாறு கேட்ட காலத்து முதல்வனியல்பு பொருட்டன்மை பற்றிப் பேதமாய்த் தோன்றிச் சிந்தித்தகாலத்து அபேதமாய்த் தோன்றும். இவ்விரண்டுமின்றி நேரியனும் பரியனுமாயதோர் முறைமை பற்றி எவற்றினும் ஒற்றித்து நின்றே ஒன்றினும் பற்றிலனாய் வேறு தோன்றுவது தெளிதலாம். இவ்வாறு அவனோடு ஏகனாகி நிற்க ஏகதேசச் செலவு இன்றாய் ஒழியும். நிட்டையாவது கரணங்களின் வயத்தனாதலின்றி மேலங்ஙனந் தோன்றிய இறைவனது வியாபகத்தைத் தலைப்பட்டு ஒருவாற்றுனுங் குறைவின்றி இம்மையே சீவன்முத்தனாகி மாசுநீங்கிய வழி ஆடையின் வெண்மை ஆடை முழுதும் விளங்கினாற் போல, இங்குளி வாங்குங் கலம் போலுழல்வதாகிய இவ்வுடம்பு நீங்கப் பெறும் பரமுத்தி நிலையில், வியாபகமென்னும் அறிவு விளங்கப் பெற்று முதல்வனோடு ஒத்து நிற்பன் என்பதாம்.
இவ்வாறு இருவினையொப்பால் சத்தமாதி விடயத் தன்னியன் பற்று நீங்கும். சத்திநிபாதத்தால் போக போக்கியக் கருவிகளின் செறிவு கழியும். குருவருளால் உருக்கழியும், தீக்ஷையால் சஞ்சித வினை கழியும். ஞான சாதனத்தால் எல்லா யோனிகளிலும் புக்குழல்தல் கழியும். ஞானப் பெருக்கத்தால் பாச அறிவிச்சை செயல்கள் கழியும். இறைவனது ஞான சத்தியால் அநாதி மறைப்பாகிய ஆணவமலமும் வாதனைபற்றி நிகழும் ஆகாமிய வினையும் ஒழியும். கிரியா சத்தியான சஞ்சித வினைக்குப் பற்றுக்கொடுத்து நிற்கும் முன்னிலையாகிய மாயேய மலமும் ஒழியும். உடம்பு முகந்து கொண்ட பிராரத்த கன்மம் அநுபவத்தால் ஒழியும். மும்மல நீக்கத்தால் ஏக தேசத் தன்மை கழியும். வாதனை நீக்கத்தால் விடயந் தன்னியன் நுகர்வது கழியும்.
இவ்வாறு சகல உபாதிகளும் கழிந்து சிவஞானம் விளங்கப் பெற்று மாணிக்கத்தைச் சார்ந்த படிகம் மாணிக்கமாய் ஒழியாது, மாணிக்கத்தின் ஒளியும் நிறமும் பெற்றுத் தன் ஒளி அதுவதுவாயடங்கி அம்மாணிக்கத்திற்குச் சமமாய் நிற்குமாறு போலத் தன் குணம் அவையேயாய் அடங்கிப் பரமான்மாவே போல ஒற்றித்து நின்று அப்பரமான்வே தனக்கு விடயமாக அயராவன்பு செய்து சிவாநந்த அநுபவம் பெற்று அந்நிலையிலும் மீளா அடிமையே என்று திருவருள் கண்ணாகத் (தன்முனைப்பின்றி) அநுபூதியிற் காண்பன்.
‘சித்தாந்த சைவம்’ என்னும் தலைப்பில் சித்தாந்த ஆசிரியர் சைவத்திரு த. சி. ச. இராமச்சங்கு பாண்டியன் ஐயா அவர்கள் வரைந்த கட்டுரையில் இருந்து ஒரு பகுதி…