The Greatness of Siva Puja


TaHiEnFrEs

சிவபூஜை

சிவபூஜை கற்பக மரம் போன்று விரும்பிய அனைத்தையும் தரவல்லது ஆகும். சிவபூசை செய்வது அனைத்து தானங்கள், தருமங்கள், தவங்கள் செய்த பலனையும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனையும் அனைத்து வேள்விகளையும் செய்த பலனையும் ஒருங்கே தருவதாகும். சிவபூசை செய்தவன் வாழ்வின் நிறைவில் சிவகணநாதராகித் தெய்வ விமானத்தில் ஏறி எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து மகிழ்ந்து பின்பு இறைவன் திருவடியில் இரண்டற கலப்பான்.

திருமுதுகுன்றத்தில் சிவலிங்கத்திற்கு ஒரு கை நீரால் திருமஞ்சனம் செய்து ஒரு மலரைச் சாத்தினால் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), மகாமேரு, வாரணாசி எனப்படும் காசி, பிரயாகை, கேகைநதிக்கரை, இமயமலை முதலிய மலைகள் முதலியவற்றில் நெடுங்காலம் தவஞ்செய்து தானதருமங்கள் செய்ததற்கு ஒப்பாகும்.

விருத்தகிரியில் ஒருநாள் சிவபூசை செய்தால் அனைத்து விரதங்களை நோற்றப் பலனும் கோடி அசுவமேத யாகம் செய்த பலனும் உண்டாகும். அத்தலத்தில் சிவபூசை செய்தவனுக்கு இயமவாதனை இல்லை.

விருத்தகிரியில் சிவபூசை செய்தவன் எந்தப் பதங்களை விரும்பினாலும் அந்தப் பதமும் வரம்பில்லாத செல்வமும் அவனுக்குக் கிட்டும். மேலும் அட்டமா சித்திகளும் ஞானமும் அவனுக்குச் சித்திக்கும்.

விருத்தாசலத்தில் சிவபூசை செய்தே இந்திரன், பிரமன், திருமால் முதலியோர் தத்தம் பதவிகளைப் பெற்றார்கள். இந்திராணி, சரசுவதி, இலட்சுமி முதலியோர் இங்கு வழிபட்டே முறையே இந்திரன், பிரமன், திருமால் முதலியோர்க்கு நாயகிகள் ஆனார்கள்.

சிவலிங்க பூஜை செய்து வழிபட்டவர்கள் பதினாறு இந்திரர்களின் ஆயுட்காலம் சாரூப பதத்தில் இருப்பார்கள்.

ஒருவர் சிவபூசை செய்யக் கண்டு அதை மனதால் பாவித்து (பாவனைப் பூசை) வழிபடுதலும் நல்ல பலன்களை உண்டாக்கும். அப்படிச் செய்தவர்கள் உலகை ஆளும் வெற்றிச் சிறப்பைப் பெற்று வாழ்ந்து நிறைவாக வீடுபேறு அடைவர்.

துறவிகளும் கூட சிவபூசை செய்பவர்க்கு நிகரானவர் அல்ல. வஞ்சகனாயினும் சிவபூசை செய்தவன் புண்ணியன் ஆவான். அவன் செய்த பாவங்கள் தாமரையிலையும் தண்ணீரும் போல ஒட்டாமல் இருந்து அவனைப் பிரியும். அதனால் சிவ பூசையானது பிறவி எனும் கொடுநோயை நீக்குகின்ற மருத்துவனாகும்.

காலைப் பொழுதில் சிவபூசை செய்பவர்கள் சொர்க்காதி போகமும், மதியம் செய்பவர்கள் அசுவமேதயாகப் பலனும், மாலை செய்பவர்கள் பாவ விமோசனமும் பெறுவார்கள். பிரதோச காலத்தில் சிவ வழிபாடு செய்பவர்கள் மூன்று காலங்களிலும் சிவபூசை செய்த பலனைப் பெறுவார்கள்.

ஸ்ரீ ஞானக்கூத்தர் அருளிய விருத்தாச்சல புராணத்தின் உரைநடைச்சுருக்கத்தின் சிவபூஜை மகிமை சருக்கத்தில் இருந்து…

நூலாசிரியர் : திரு சே.சக்திவேல்.

வெளியீடு : தருமை ஆதீனம்