சிவ பூஜை மான்மியம்
விண்ணவர் , முநிவர் , எவ்வெத் தலங்களிற் சிவபெருமானை உமையுடன் வழிபட்டனர் , எங்களுக்கு உணர்த்தியருளுக என முநிவர்கள் கேட்கச் ஶூதமாமுனிவர் கூறுகின்றார் .
திருமால் : – காசியிற் சிவனைப் பூசித்துக் காத்தல் தொழிலும் , ஐந்தாயுதமும் , திருமகளும் , கருடவாகனமும் பின்னும் பல வரங்களும் அளிக்கப் பெற்றார் . சிவலோகத்தின் கீழே வைணவபதத்தில் இருக்கப் பெற்றார் .
பிரமன் : – காஞ்சியிற் பிஞ்ஞகனை வழிபட்டுப் படைத்தல் தொழிலும் கலைமகளும் , அன்னவாகனம் முதலியவும் தரப்பெற்று வைணவபதத்தின் கீழ் இருக்கப் பெற்றான் . அந்த இடம் பிரமலோகம் எனப்படும் .
இந்திரன் : –ஸ்ரீ சைலத்தில் ஈசனை அருச்சித்து வானுலக ஆட்சியும் , புலோமிசை( இந்திராணி ) யும் , ஐராவதமும் , உச்சைச்சிரவமும் , குலிசப்படையும் , கற்பகத்தருவும் , காமதேனுவும் , சிந்தாமணியும் , கீழ்த்திசையரசும் கிடைக்கப் பெற்றான் .
அக்கினி : – அண்ணாமலையில் அண்ணலைப் பூசித்து அக்கினிகளுக்கு அரசும் , சுவாஹா தேவியும் , ஆட்டுவாகனமும் , சத்திப்படையும் , தென்கீழ்த் திசை அரசும் பெற்றான் ,
இயமன் : – கேதாரத்தில் எம்பெருமானை வழிபட்டுத் தண்டமும் , எருமைக் கடா வாகனமும் , நடுவன் என்ற நிலையும் பெற்றுத் தென்றிசைக்குத் தலைவனானான் : மற்றும் சுவர்க்கத்துக்கும் நரகத்துக்கும் புகவேண்டிய உயிர்களின் புண்ணிய பாவம் அறிந்து கூறும் சபையினரையும் , கதிரவன் முதலான உயிர்கள் புரியும் கருமத்தை அறிந்துரைக்கப் பதினான்கு எழுத்தாளர்களுக்குத் தலைமை பூண்ட சித்திரகுத்தனையும் பெற்றான்.
நிருதி : -நிருதி கோகரணத்தில் நீலகண்டரைப் பூசித்து வாளும் , அரக்கர் சேனையும் பெற்றுத் தென்மேற்குத் திசைக்குத் தலைமை கொண்டான் .
வருணன் : – திருவானைக்காவில் வள்ளலை வழிபட்டு மகரமீன் வாகனமும் , பாசம் முதலிய படைகளும் , கடலரசும் மேற்றிசைத் தலைமையும் பெற்றான் .
வாயு :
வாயு காளத்தியில் மங்கைப்பாகனைப் பூசித்துக் காற்றின் தலைமையும் , பல படைகளும் , வடமேற்குத் திசை அரசும் பெற்றான் .
குபேரன் : –
குபேரன் சித்தேச்சுரத்திற் குன்ற வில்லியைப் பரவி வடதிசையரசும் நவநிதித் தலைமையும் , புட்பக விமானமும் , இயக்கர் முதன்மையும் , கதை முதலாம் படைகளும் , சிவபெருமானது தோழமையும் அருளப் பெற்றான் .
ஈசானன் : – திருவாரூரில் எந்தையைப் பூசித்துப் பெயருக்கு ஏற்ப சிவரூபமும் , படைகளும் , விடைவாகனமும் , பிற சிவசின்னங்களும் வடகீழ்த் திசையரசும் , அதிகாரம் முடிந்தவுடன் சிவனடி நிழல் வாழ்வும் வேண்டிப் பெற்றனன் .
சூரியன் : –
சூரியன் காஞ்சியிற் சூலபாணியைப் பூசித்து மறைமண்டலத்தில் தனி இருப்பும் , ஏழ்பரித்தேரும் , நவக்கிரகத் தலைமையும் பெற்றுப் பகுதி மண்டலத்திலே இருக்கப் பெற்றான் .
சந்திரன் : – சந்திரன் கும்பகோணத்திற் சம்புவை ஆராதித்துப் பயிர்களுக்கு அரசும் , நக்ஷத்திரங்களுக்கு நாயகனாம் , பேறும் பெற்றுப் , பரமனுக்கு ஆபரணமுமாகிச் சூரியனுடன் மேருவை வலம்வரப் பெற்றான் .
கிரகங்கள்
இவ்வாறே செவ்வாய் ( அங்காரான் ) திருவிடைமருதூரிலும் , புதன் மதுரையிலும் , வியாழன் ( குரு பிரகஸ்பதி ) சேதுவிலும் , வெள்ளி ( சுக்கிரன் ) திருவாலங்காட்டிலும் , சனி வேதாரணியத்திலும் பரமனை வழிபட்டுச் சோம சூரிய மண்டலங்களின் மேற்கே அருகிலேயிருந்து உயிர்களின் வினைக்கீடாக அனுபவம் தரவும் , வியாழன் தேவர் குருவாகவும் , வெள்ளி அரசர் குருவாகவும் இருக்கப் பெற்றனர் .
எழு முநிவர் :
வசிட்டர் முதலான எழுமுநிவரும் ( தில்லைச் ) சிற்றம்பலத்திலே சிவனை வழிபட்டுப் பல நூல் உணர்வும் , நவ கோள்களின் மேல் நிலையிலே வாழும் பேறும் , இறுதியிற் பேரின்ப வீட்டை அடையும் வாழ்வையும் பெற்றனர்.
ஸ்ரீ ஶூதமாமுனிவர் மேலுஞ் சொல்கிறார் :
உத்தான பாதன் மைந்தன் துருவன் காசியில் விஸ்வேச்சுரனை வழிபாடு செய்து அளவற்ற வரங்களையும் எழுமுநிவர் நிலைக்கு மேலான நிலையும் , எழுமுநிவரும் தன்னைச்சுற்றி வரும் பேற்றையும் பெற்று உயர் பதத்தில் திகழ்கின்றான் .
ஆதிசேடன் கும்பகோணத்திற் பரமனை அருச்சித்துக் கடல் புவியனைத்தும் முடித்தலையிற் சுமக்கும் பேறு பெற்றான் .
இப்படியே எண்ணற்ற தலங்களினும் மலைமுடியினும் கடல் கரைகளிலும் இமையவரும் , முநிவரும் , சித்தரும் , காருடரும் , கந்தருவரும் , வித்தியாதரரும் , இயக்கரும் , சாகரும் மற்றும் பலரும் இறைவனைப் பூசித்துத் தத்தம் பதவியையும் வரங்களையும் பெற்றனர் .
ஆகையால் அறத்தை விரும்பும் மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வகைப் பொருளையும் பல்கும் சிவபூஜை செய்யவேண்டும் . இறை வழிபாட்டாற் சித்தராயினர் சிலர்.இங்கனம் வழிபட்டுப்புகழ் பெற்றவர் சனகாதசித்தர் கபிலராதியோர் நித்தராயினர் . சிலர் சாலோகத்தையும் , சிலர் சாமீபத்தையும் ,சிலர் சாரூபத்தையும் , சிலர் சாயுச்சியம் எனும் இறைவன் திருவடி நிழலையும் பெற்றனர் . சில மானிடர் சிவவழிபாட்டால் அளவற்ற செல்வத்தை இம்மையிலே பெற்றும் செல்வச்செருக்கால் மாயையில் மீளவும் மூழ்கி மறுபடியும் வழிபட்டார் . மற்றும் வெற்றி வேண்டினவர் வெற்றியையும் , மனைவி மக்களை வேண்டினவர் மனைவி மக்களையும் , பசு , வாகனம் , செல்வம் , அழகு , வடிவு , வண்மை , சத்தியம் . பராக்கிரமம் முதலிய வேண்டினவர் தாம் வேண்டினவற்றையும் சிவபூஜை வழிபட்டாற் பெற்றனர்.
திரு ஞானவரோதய பண்டாரம் இயற்றிய உபதேச காண்டம் என்னும் நூலில் இருந்து…