The Importance of Vedic Tradition in Śaivam


TaHiEnFrEs

வைதிக சைவம் என்ற பெயரால் பெறப்படும் பொருள் வேத சம்பந்தமான சிவாகமம் என்பதாம். வைதிகம் – வேத சம்பந்தமுள்ளது. * சைவம் – சிவாகமம். எனவே வேத நூலையும் சிவாகம நூலையும் முக்கிய பிரமாணமாகக் கொண்ட ஒரு சிறந்த சமயத்துக்கு வைதிக சைவம் என்ற பெயர் பொருந்துகின்றது.

ஆன்மாக்கள் எண்ணில்லாதனவாய் அநாதியாய்ப் பல திறப்படப் பந்தித்த பாசத்தடையுடையவைகளாய் இருத்தலின் அவைகளுக்கு முதல்வன் அப்பாசத்தடையால் நேர்ந்த அறியாமையைப் போக்கி அறிவை விளக்குகின்ற போது ஆன்மாக்களுக்கெல்லாம் அறிவு ஒரு தன்மையாக விளங்குவதில்லை. சூரியன் நடு நின்று ஒரே தன்மையாகப் பூதவிருளைப் போக்கிக்கண்ணொளியை விளக்கினாலும் கண்களெல்லாம் ஒரே தன்மையாக விளங்கப் பெறாது தத்தம் தூய்மைக்கு ஏற்றபடி விளங்கப் பெறுவது * கண்கூடு

இவ்வாறு தம்மைப் பந்தித்த பாச சத்தி பேதத்தால் பல திறப்பட அறிவு விளங்கப் பெற்ற ஆன்மாக்கள் ஓதி உணர்ந்து ஒழுகத்தக்க நூல்களும் பலதிறப்படும் அல்லவா? அவைகளை அருளிச் செய்த முதல்வன் ஆன்மாக்களை இரண்டு பெரும் பகுதிகளாக வகைப்படுத்தி, அவைகளுக்குப் பொதுவாக ஒரு வகை நூல்களையும் சிறப்பாக ஒரு வகை நூல்களையும் அருளிச் செய்தான். • பொது நூல் வேதமெனப் பெயர் பெறும். சிறப்பு நூல் சிவாகமமெனப் பெயர் பெறும். சிவாகமத்துக்குச் சைவம் என்ற பெயரும் உண்டு.

  • “வேத நூல் சைவ நூல்” சித்தியார் 8ஆம் சூத்திரம் செய்யுள் 267ல் சிவாகமங்கள் சைவமென்னும் பெயரால் கூறப்பட்டிருத்தல் காண்க (267) பூதவிருள் – வெளியேயுள்ள இருட்டு.

அவற்றுள் வேதமானது உலகியலைக் கூறுவது, பொது வகையாக மெய்ந்நெறியாகிய சிவ நெறியையும் அது கூறும், சைவமானது சிவநெறியைச் சிறப்பாக விரித்துக் கூறுவது.

** வேத நூல் ஆன்மாக்களுக்கெல்லாம் பொது, சைவ நூல் விளக்கம் மிகுதியுற்ற ஆன்மாக்களுக்கே சிறப்பாக உரியது.

இக்காலத்தில் ஒரு சிலர் தமது பேதைமையால் வேதத்தை நிந்தித்துப் புறக்கணித்தும், சைவத்தைப் போற்றுவதுபோற் பாவித்து அதன் மூல தத்துவங்களைக் களைந்தும் வருகின்றார்கள். வேறு சிலர் தாங்கள் ஒரு சமயத்தையும் சாராது, சமயாசாரியர்பாற் சமய வுண்மைகளைக் சமய நிச்சயம் செய்ய கேட்டறியாது தான்றோன்றிகளாய்ச் முற்படுகின்றார்கள்.

கடவுளால் அருளிச் செய்யப்பட்ட வேதத்துக்கு விரோதமாகச் சித்தாந்த சைவம் எவ்விதத்திலும் எப்பொழுதும் இருக்க முடியாது. ஆகையாற்றானே பெரியோர்கள் வைதிகம் என்ற அடைகொடுத்துச் சைவத்தை வழங்கி வந்திருக்கின்றார்கள்.

“இராஜாங் கத்தில்
அமர்ந்தது வைதிகசைவம் அழகி தந்தோ”

  • தாயுமான சுவாமி பாடல், ஆகாரபுவனம் 10.
    என்றார் நமது தாயுமானப் பெருந்தகையார்.

ஆதலால் சைவர் ஒவ்வொருவரும் வேதத்தையும் வேதக் கிரியைகளையும் கைக்கொண்டே சைவநெறியில் சரிக்கவேண்டும் என்பதை வைதிக சைவம் என்ற பெயர் விளக்குகின்றது.

“உலகியல் வேதநூல் ஒழுக்கமென்பதும், நிலவு மெய்ந்நெறி சிவநெறியதென்பதும்” – என்பது பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் – 820.

** “நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும் நிகழ்த்தியது” – என்பது சிவஞான சித்தியார்.

  • கண்கூடு – பிரத்தியக்ஷம்.

வேதமொடாகமம் மெய்யாம் இறைவனூல், ஓதும் பொதுவும் சிறப்புமென்றுன்னுக – என்பது திருமந்திரம். “ஆரண நூல் பொது சைவம் அருஞ்சிறப்பு நூலாம்” என்பது சிவஞான சித்தியார்.

வைதிக சைவம் என்னும் தலைப்பில் பஞ்சாக்ஷரபுரம் ஸ்ரீ வாலையானந்த சுவாமிகள்.