திருவானைக்கா திருத்தலப்பயன்:
இத்தலம் அடைந்தவர்க்குத் தானம், தருமம், வேள்விபுரிதல் ஞானம், செபம், கல்வி, நன்மை, யோகம். மோனம், தீர்த்த மாடல், முத்திசாதனை முதலியன வேண்டா. இப் பதியை அடைவதே எல்லாப் பயனும் நல்கும் என்பர் தந்திவனப்புராண( திருவானைக்கா தலபுராண நூல்களில் ஒன்று) ஆசிரியரான கமலை ஸ்ரீ ஞானப்பிரகாசர்.
“தானம்ஏன் தவம்ஏன் மிக்க தருமம்ஏன் வேள்வி தான்ஏன் ஞானம்ஏன் செபம்ஏன் கல்வி தன்மைஏன் யோகந் தான்ஏன் மோனம்ஏன் தீர்த்தந் தான்ஏன் முத்திசா தனைஏன் சுத்த ஞானமேன் மையினால் ஓங்கும் அப்பதி அடைந்து ளார்க்கே”
(தலமகிமைச் சருக்கம் பா. 96)
இத்தல புராணத்தினிடையே பல புராண வரலாறுகளையும் இணைத்துக் கூறுகிறார். திருஞானசம்பந்தப் பெருமான் சமணர் வரலாறு (200), சிவபெருமான் இந்திரன் வடிவில் வந்தது (287), திரிபுரம் எரித்தது (291), அமுதம் கடைந்தது (392) போன்ற பல செய்திகள் அமைந்துள்ளன.