ஓருயிருக்கு அது எடுத்துழன்ற எல்லாப்பிறப்புக்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கமைந்ததே இந்த மனிதப்பிறப்பு. இதனில் தீவிரதர சத்திநிபாதம் எனப்படும் திருவருட்பதிவு, இப்பிறப்பையும் அறுதியிட்டு உறுதிப் பொருள்களுள் உயர்ந்ததாகிய வீடுபேற்றினை நல்கும் திறத்ததாகும்.
இதனை,
“இருவினை நேரொப்பில் இன் அருட் சத்தி –
குரு என வந்து குணம் பல நீக்கித் –
தருமெனும் ஞானத்தால் தன்செயல் அற்றால் –
திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே ”
என்னும் திருமந்திரப் பாட்டினால் அறியலாம்.
ஆகவே. திருவருட்பதிவு என்பது ஆசாரியமூர்த்தியின் வெளிப்பாட்டுக்குரிய அறிகுறியே ஆகும். சூரியன் வெளிப்படுவதன் முன்னம் கீழ்த்திசை வானம், அருண உதயத்தைப்பெற்று இருள் நீங்கப்பெறுவது போல்வதாகும் இந்த ஆசிரிய வெளிப்பாடு என்னலாம்.
இறைவன் உயிர்களின் இப்படியான பக்குவமுதிர்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டே இருந்து சத்திநிபாத நிகழ்ச்சியை நிகழ்த்தியுதவுகின்றான். ஆதலால், இந்த உதவியையும் நாம் நினைந்து போற்றுவதே முறையாம்.
இதுபற்றியே ஆசிரியர், ஈண்டு சத்தி பதிக்கும் தரம் போற்றி எனக் கூறிப் போற்றி உள்ளார்.
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன வெளியீடான கொற்றவன்குடி ஶ்ரீ உமாபதி தேவநாயனார் அருளிச்செய்த
போற்றிப்பஃறொடைக்கு ஏற்புக்கட்டுரை (1958) என்னும் நூலில் இருந்து…
இஃது திருக்கயிலாயபரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் இருபத்தொன்றாவது குருமகாசந்நிதானம் ஶ்ரீ-ல-ஶ்ரீ சுப்பிரமணியதேசிக பரமாசாரிய சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி வெளியிடப் பெற்றது.