மாணவன் : இறைவன் என்னோடு ஒன்றாய் வேறாய் உடனாய் இருக்கிறான் எனில் நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களையும் சிவபெருமானும் அனுபவிப்பானா?
ஆச்சாரியர் : மாணவனே !
உன் வயிற்றில் எத்தனையோ புழு பூச்சிகள் கிடந்து உழலுகின்றன.
அந்த புழு முதலிய சிற்றுயிர்கள் அடைகிற இன்ப துன்பங்களை உன்னுடைய வினைப்பயன் என்று நீ எந்தக் காலத்திலாவது கருதி இருக்கிறாயா ?
கருதுவது இல்லை தானே?
அந்த சிற்றுயிர்கள் படும் இன்ப துன்பங்களை நீ அனுபவிப்பது உண்டா ? இல்லை தானே ?
அது போலத்தான் இறைவனும்.
சிவ வியாபகத்தின் கீழ் உள்ள உயிர்கள் அனுபவிக்கிற இன்ப துன்பங்களை சிவபெருமான் ஒரு பொழுதும் தான் அனுபவிப்பதில்லை.
அவன் உயிர்களோடு ஒன்றாய் வேறாய் உடனாய் இருக்கிறான்.
உயிருக்கு உயிராய் இருந்து உயிர்களைப் பிரிப்பின்றிக் கூடி நிற்கின்றான்.
ஆயினும் அவற்றின் தன்மை அவனை பற்றாதவாறு நிற்பதால் உயிர்களது இன்ப துன்ப வாதனைகள் எவற்றையும் சிவபெருமான் பற்றுவது இல்லை என்று அறிவாயாக.
இப்படியாக இறைவன் பற்றற்றவனாய் இருக்கிறான் என்று திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் தனது திருக்களிற்றுப்படியார் எனும் மெய்கண்ட சாத்திரத்தின் 87 ஆவது பாடலில் விளக்கியருளிச் செய்திருக்கிறார்.
அப்பாடல்,
உன்னுதரத் தேகிடந்த கீடம் உறுவதெல்லாம்
உன்னுடைய தென்னாய்நீ உற்றனையோ – மன்னுயிர்கள்
அவ்வகையே காண்இங் கழிவதுவும் ஆவதுவும்
செவ்வகையே நின்றசிவன் பால்.
நன்றி : மாபாடிய உரைவகுப்புக்குழு.