அவனே தானே யாகிய அந்நெறி
ஏக னாகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே.-சிவஞானபோதம் –
பத்தாம் சூத்திரம் –
உண்மை அதிகாரம் – பயனியல்.
ஒன்பதாம் சூத்திரத்தால் சாதனஞ்செய்யும் முறை கூறி இனி அச்சாதனத்தால் உண்டாகும் பயன், பாசத்தை விடுதலும் சிவனை அடைதலும் சிவனை அடைந்த பின்னர்த் தேகம் இருக்குமளவும் பிராரத்துவ வாசனை தாக்காதிருத்தலும் ஆதலால், அம்மூன்றனையும் மூன்று சூத்திரத்தால் பயனியல் என வைத்துக் கூறத்தொடங்கி, முதலாவது இப்பத்தாஞ் சூத்திரத்தால் பாச நீக்கமாகிய பயனை வகுத்துக் கூறுகிறார்.
இச்சூத்திரத்தின் கருத்து யாதெனில், பாசக்ஷயம் பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று. நுதலல் – கருதல்.
இக்கருத்துரையின் பொருளாவது, ஏழாம் சூத்திரத்தில் சாதிக்கும் பொருளாகிய உயிரினுடைய இயல்பையும், எட்டாம் சூத்திரத்தில் சாதித்துப் பெறப்படும் பொருளாகிய பயனியல்பையும், ஒன்பதாம் சூத்திரத்தில் சாதிக்கும் முறையையும் உணர்த்தி, இனி அந்தச் சாதனத்தால் ஆகிய பயனியல்பை வகுத்துக் கூறத் தொடங்கினார். ஆதலால் இவ்வியல் பயனியல் என்னும் பெயரினை உடையதாயிற்று.
அப்பயனாவது பாசநீக்கமும் சிவப்பேறும் என இருவகைப்படும். அவ்விரண்டினுள் சுட்டுணர்வாலாகிய ஏகதேச நோக்கத்தைத் திருவைந்தெழுத்தினை உச்சரித்தலால் அறவே நீக்கிய பொழுது பெறப்படுவது ஆன்மசுத்தியின் பயனாகிய பாச நீக்கமாகும். அப்பாச நீக்கத்தைச் செய்து கொள்ளுகின்ற தன்மையை முற்சூத்திரத்தில் சிந்தித்த பொருளைத் தெளியும்முறையை உணர்த்தும் முகத்தால் உணர்த்துதல் என்பதாம்.
ஒன்பதாம் சூத்திரத்தில் ஆன்ம சுத்தியையும் பத்தாம் சூத்திரத்தில் ஆன்ம லாபத்தையும் கூறுதலால் இந்த இருசூத்திரங்களும் சம்பந்தம் உடையனவாகும்.
இச்சூத்திரத்தின் பொருளாவது: ஞானக்கண்ணினால் காணப்பட்ட முதல்வன் பெத்தநிலையில் உயிரினோடு உடனாய் நின்று அறியவும் அவ்வுயிருக்கு வேறாகக் காணப்படாமல் அவ்வுயிர் தானே அறிந்தேன் என்று சொல்லும்படி உயிரேயாய் ஒற்றுமைப்பட்டு அவ்வுயிரின் வழி நிற்பன்; அதுபோல முத்தி நிலையில் உயிர் முதல்வனோடு உடனாய் நின்று அறியவும் தான் (உயிர்) என அம்முதல்வனுக்கு வேறாகக் காணப்படாமல் அம்முதல்வனோடு ஒற்றுமைப்பட்டு அந்த இறைபணியின் வழுவாது நிற்பின் மலம் மாயை என்னும் இவ்விரண்டு மலங்களுடன் வலிமை பொருந்திய கன்மமலமும் இல்லையாய் ஒழியும் என்பதாம்.
திரு த.ச.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அவர்கள் இயற்றிய சிவஞானபோதம் உரைநடை – பயனியல் (1978) என்னும் நூலில் இருந்து…
இது திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் இருபத்திரண்டாவது குருமகாசந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாணதேசிக பரமாசாரிய சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி வெளியிடப்பெற்றது.