முதல்வனாகிய சிவபெருமான் தொழில் புரிதலின் உருவுடையனாதல் வேண்டும். உடம்பின்றி வினைசெய்தல் கூடாது ஆதலினால்; என்பது பூருவ பக்கம்.
அதற்கு விடை : தன் உடம்பை உயிர் உருவம் இன்றியே இயக்குகிறது; இறைவனும் அவ்வாறு உருவின்றி நின்றே தன் உருவமாகிய உலகைத் தொழிற்படுத்துதல் அமையும் என்பது. உலகமே இறைவனது உடம்பு. உலகத்தில் உள்ள சராசரங்கள் இறைவனுக்கு
மெய் வாய் கண் போன்ற உறுப்புக்கள். உடம்புதோறும் உள்ள உயிர்கள் அறிவுப்பொறி போல்வன. முதல்வனது விழைவு, அறிவு, செயல் ஆற்றல்கள், மனம், புத்தி, ஆங்காரம் என்னும் அகக்கரணங்கள் போல்வன. இங்ஙனம் நின்று உயிர்களாகிய பொறிகளுக்கு முதல்வன் அறிவை விளக்கி அவற்றைச் செயற்படுத்துவன். இவ்வாறு முதல்வன் செய்துவரும் செயலுக்கு நுண்ணிய ஐந்தொழில் என்பது பெயர்.
இதனைப் பின்வரும் சித்தியார் செய்யுள் எடுத்துக் கூறுகிறது:
“உலகமே உருவ மாக யோனிகள் உறுப்ப தாக
அலகுபே ரிச்சா ஞானக் கிரியையுட் கரண மாக
அலகிலா உயிர்ப்பு லன்கட் கறிவினை யாக்கி ஐந்து
நலமிகு தொழில்க ளோடும் நாடகம் நடிப்பன் நாதன் “
இனிச் சிலர் பின்வருமாறு வினாவை எழுப்புவர்: குடத்தையும் அதனை வனையும் குயவனையும் ஓரிடத்து முன்கண்டவன் வேறிடத்தில் குடத்தை மட்டும் காண்பனாயின், இக்குடத்தை வனைவதற்கு ஒரு வினைமுதல் இருத்தல் வேண்டும் எனக் கருதி உணர்வன். ஆனால் உலகத்தையும் உலகத்தைப் படைத்த இறைவனையும் ஒருவன் முன்னர் எப்பொழுதும் ஒருங்கே கண்டதில்லை. ஆதலினால், உலகத்தை மட்டும் கண்டு, அதனை ஆக்கியோன் ஒருவன் உளன் என்பது எவ்வாறு கருதல் அளவையாகும்? என்பது பூருவ பக்கம்.
அதற்கு விடை : சமையலறையில் புகையினையும் அதன் காரணமான தீயினையும் ஒருங்கே கண்டவன் மற்றொரு சமையலறையில் புகை மாத்திரம் காணும்போது அங்குத் தீயும் உண்டென மனத்துத் துணிதல் கூடும். மலைமேல் புகையைமட்டுங் கண்டு அங்குத் தீ உண்டு என்பதைச் சமையல் அறையில் கண்ட புகையை எடுத்துக்காட்டித்
துணிதல் கூடுமா? எனின், கூடாது எனல் வேண்டும். ஏனென்றால் சிறிதாகிய சமையற் புகைக்குப் பெரிதாகிய மலையிற் புகை வேறு பாடுடையது. ஆனால் மலையிற் புகையைக் கண்டு அங்குத் தீ உண்டு என்னும் துணிபு நிகழும் என்பதே தலையாய அறிவினார் கொள்கை. ஆண்டுத் துணிபு நிகழாது என்போன் அனுமானத்தைப் பிரமாணமாகக் கொண்டோன் அல்லன். இரண்டு புகைகளுக்கும் வேறுபாடு உண்டேனும், புகை என்னும் பொதுமைபற்றி அங்கே துணிவு நிகழும் என்பது கருத்தாயின், உலகத்தினிடத்தும் அது பொருந்தும். எவ்வாறெனின், செயப்படு பொருளையும், செயலையும், செய்வோனையும் ஒருங்குடன் கண்டு வந்தவன், பிறிதோரிடத்துச் செயப்படுபொருளை மாத்திரம் காண்பானாயின், காரியமாதற் பொதுமைபற்றி, அதுவும் செய்வோனை உடைத்து என்று துணிதல் பொருத்தமே ஆகும்.
சிவஞானபாடியத் திறவு (1977) என்னும் நூலில் சைவத்திரு க. வச்சிரவேல் முதலியார் அவர்கள்.