The Six Faces of Ṣaṇmukha: A Study of Śaiva Tradition


TaHiEnFrEs

சீடர்: அறுமுகன் என்பதற்குக் கருத்தமென்ன?

குரு: ஆறு முகமுடையவன் எனவாம். விவரம்: சிற்சத்தியாகிய சிவசத்தியினுடைய முகமொன்று, சிவனுடைய முகம் ஐந்தும் ஆக ஆறு முகங்கள் உள்ளன. இந்த ஆறு முகங்களும் ஆன்மாக்கள் விருப்பு நிறைவேறுமாறு அருளால் செய்யப்படும் ஸிருட்டி யாதி பஞ்சகிருத்திய நிமித்தம் அபேத சிவசத்தியாய் சிற்சத்தியில் பத்திலொரு கூறு வலியுள்ள மஹாசாதாக்கிய மென்னும் தத்துவமும் மஹாசாதாக்கியமென்னும் மூர்த்தியும் பொருந்தின கீழ் நோக்காயுள்ள அதோ முகமும், பராசத்தியிற் பத்திலொரு கூறு வலியுள்ள சாதாக்கியமென்னுந் தத்துவமும் சதாசிவனென்னு மூர்த்தியும் பொருந்தின மேனோக்காயுள்ள ஈசானமுகமும், ஆதி சத்தியிற் பத்திலொருகூறு வலியுள்ள அமூர்த்திசாதாக்கிய மென்னுந் தத்துவமும் ஈசனென்னு மூர்த்தியும் பொருந்தின மேற்கு நோக்காயுள்ள சத்தியோசாத முகமும், இச்சாசத்தியிற் பத்திலொருகூறு வலியுள்ள மூர்த்திசாதாக்கியமென்னுந் தத்துவமும் பிரமீச னென்னு மூர்த்தியும் பொருந்தின வடக்குநோக்கா யுள்ள வாமதேவமுகமும், ஞானசத்தியிற் பத்திலொரு கூறு வலியுள்ள கர்த்திருசாதாக்கிய மென்னுந் தத்துவமும், ஈசுரனென்னு மூர்த்தியும் பொருந்தின தெற்கு நோக்காயுள்ள அகோரமுகமும், கிரியாசத்தியிற் பத்திலொருகூறு வலியுள்ள கன்மசாதாக்கியமென்னுந் தத்துவமும் ஈசானனென்னு மூர்த்தியும் பொருந்தின கிழக்கு நோக்காயுள்ள தற்புருட முகமுமாம் என்ப.

 அறுமுகங்கட்குமுரிய பிரமாணம் – சம்பவகாண்டத்து நரு-ம் அத்தியாயத்து எ -ம் சுலோகத்தில் “நங்குமா ரன் உனது சுவரூபத்தையும், எனது சுவரூபத்தையுங் கொண்டவன். ஆகலின் அறுமுகனாயினன்” எனக் கிரிகுமாரிக்குக் கிரிவில்லி கிளத்தியதாக வருவதூஉம், திருச்செந்தூர்க் கந்தர்கலிவெண்பாவில் “வெந்தகுவர்க் காற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி -யைந்து முகத்தோ டதோமுகமுந் – தந்து திருமுகங்க ளாறாகிச் செந் தழற்க ணாறும் -ஒருமுகமாய்த் தீப்பொறியா றுய்ப்ப” எனக் குமரகுருபர சுவாமிகள் குயின்றதாக வருவதூஉ மாம். சண்முகங்களுள், சாற்றிய கலிவெண்பாக் கூறுமாறு சூரனைத்தடிந்து பகைவருயிர் சிந்திய முகம்,உயிர்களின் ஊழ்வினையை மாற்றிப் பேரின்ப சுகந்தரு முகம், வேதங்களையு மாகமங்களையு முடிக்கு முகம் , பாசவிருளை நீக்கிச் சோதிமயமாய் விளங்கு

முகம் , தேவசேனைக்கும் வள்ளியம்மைக்கு மோக

முதவு முகம் , தன்னடி சேர்வார்க்கு வரமளித்தருளுமுகம்  எனவுஞ் சிலர் கூறுப.

கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, மேல், கீழ்

என்னும் ஆறு முகத்துஞ் சிதாகாசமாக நிறைந்திருக்கும் பரமான்மா ஷண்முகனெனவாம். 

ஷட் + முகம் = ஷண்முகம். ஷட் = ஆறு.

அத்தியாச்சிரம சுத்தாத்துவைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச்செய்த ஶ்ரீ சுப்பிரமணிய வியாச(1893 – முதற்பதிப்பு)த்தில் இருந்து.