ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னுமாறும் பகம் எனப்படுதலின்,இவை சிவபிரானுக்கே யுண்மையின் அவரே பகவான் எனப்படுவர்.
அற்றேல், இவை யாறுஞ் சிவபிரானுக்குள்ளன என்பதற்குப் பிரமாண மென்னையெனின்; அவர்க்கு ஐசுவரிய முண்மைக்கு ஈசுர பதச்சுருதியும், வீரியமுண்மைக்கு உக்கிரபதச் சுருதியும், புகழுண்மைக்குச் சிவபதச்சுருதியும், திருவுண்மைக்கு இருக்குவேதமும், ஞானமுண்மைக்குச் சருவஞ்ஞ சுருதியும், வைராக்கியமுண்மைக்குக் காமரிபுபதச்சுருதியும் பிரமாணமாம் என்க.
“திருவினாற்சிரேட்டர்” என்றும், “திருவையெய்தும் பொருட்டுச் சிவபிரானது விசித்திரரூபமாகிய லிங்கந் தேவராற் பூசிக்கப்பட்டது” என்றும் இருக்கு வேதங்கூறலின், ஈண்டுத் திருவெனப்பட்டது பொருட்டிரு அன்றென்க.
வாய்மை, பொறை, தைரியம், அதிட்டித்தல், ஆன்மபோதம், சிருட்டித்தல், ஆசையின்மை, தவம், புத்தி, ஈசுரத்துவம் என்னுந் தசகுணங்களும் தருமமுஞ் சிவபிரானுக்கே இயைவன.
இனி ஐசுவரியமுடையார், பெரும் புகழுடையார், வீரர், செல்வர், அரசர், சக்கிரவர்த்திகள் என்னுமிவரையும் இன்னோன்ன இயல்புடைய பிறரையும் பகவப்பெயரான் வழங்கார். மெய்யுணர்நத அவாவறுத்தார்கட் சிவம் பிரகாசித்தல் உண்மையின், அவரைப் பகவப்பெயரான் வழங்குப.
அற்றேலஃதாக; பகவப்பெயர் சிவபிரானுக்குரியது என்பதற்கு எடுத்தோத் துண்டோவெனின்;- அதர்வண வேதமுடையார் சிவ நாமங்களுட் பகவ நாமங் கூறுதலானும், சுவேதாச்சுவதரோப நிடதஞ் சிவபிரானையே “மகேசன்” எனக் கூறுதலானும், எடுத் தோத்துண்டென்க.
நிகண்டுநூலுடையார் பூசிக்கப்படுங் குணம் உடையரினையே பகவன் என்ப.
இனி மனாதித்திரயங்களானுஞ் செயப்படும் பூசை சிவபிரா னுடையதே, திரு உருத்திரத்தில் “அவனைத்துதி” என்னும் மந்திரத்தான் விதிக்கப்பட்டமையின், அன்றியும், உபநிடதங்க ளெல்லாஞ் சிவோபாசனை செயற்பாற்று என முறையிடுகின்றன.
ஶ்ரீ ஹரதத்தாசாரிய சுவாமிகளின் சதுர்வேத தாற்பரிய சங்கிரகம்.
தமிழில் மொழிபெயர்த்து இயற்றியது யாழ்ப்பாணத்து வடகோவை வித்துவான் திரு சபாபதி நாவலர் அவர்கள்.
மறுபதிப்பும் (2019) – வெளியீடும் ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம், கள்ளக்குறிச்சி – 606202