தேவர்கள் ஸ்ரீ நந்தியெம்பெருமானிடம், “நந்தியெம்பெருமானே ! சிவத்தியானக்கடலே! ? சிவதர்ம மகிமையை உரைத்தருளுங்களென்று கூற,
அதற்கு நந்திதேவர் கூறுகின்றார்:
ஓ தேவர்களே ! அப்புண்ணியத்தைக் கேட்பீர்களாயின் நீங்கள் பேராச்சரியமடைவீர்கள். சிவபூஜாமஹிமை யென்னுஞ்சாகரத்தில் ஓர் சிறிய பிந்துவைக் கூட நீங்களறிந்திலீர். தவத்தால் சித்தகந்தர்வ வித்தியாதரர்களானீர்கள். சிவப்பிரபாவமெனும் ரத்னங்களுக்குச் சிவன் சமுத்திரம் போன்றவராதலால் சிவனே தனது தத்வத்தை யறிவாரன்றி யேனையோர் அறிவதற்கில்லை. நாங்கள் அவர்களுடைய பிரசாதத்தில் ஓர் லேசமே அறிந்தோம். அஃது அப்படியிருக்க மற்றவர்கள் அவரது மகிமையை யறியமுடியுமா? அபூர்வமாகிய ரத்னங்களைச்சம்பாதித்து ஒருவன் தனது வீட்டில் வைத்துக்கொண்டிருப்பதா யெண்ணிக்கொள்வோம். அவ்விரத்னங்களின் மகிமையை யவனறிவானேயன்றி மற்றவெரெவ்வித மறிவார். ரத்னதத்வத்தை அதன் பரீக்ஷகனே யறிவான். எல்லோருமறிவதற்கில்லை. தாக்ஷாயணி வல்லபராகிய அவ்விறைவனே நித்யன், சர்வக்ஞனாதலால் அவனே இத்தத்வத்தையறிவான்.
ஓ தேவர்களே! சிவ தர்மமெனும் ரத்னம் ரகஸ்யமாய்ச் சாக்கிரதையாய்க் காப்பாற்ற வேண்டியது, அது மிக்க பக்தனுக்கே கொடுக்கவேண்டியது, ரசம் அற்பமாயினும் அபாரமாகிய லோகத்தையும் ஸ்வர்னமாக்குகிறது. அக்னி லேசமாயினும் அது மலைபோன்ற பஞ்சைச் சாம்பராக்குகின்றது. ஔஷதம் சிறிதாயினும் அதனால் மகாவியாதி தொலைகின்றது. கத்தி சிறிதாயினும் கூர்மையாயிருந்தால் பெரிய தேகத்தின் விநாசத்திற்கும் ஹேதுவாகின்றது. இதுபோலவே சிவதர்மம் அற்பமாயினும் பாவமெனும் பெருமலையைப் பொடிப்பொடியாய் உருவிலாமற் செய்து புண்ணியத்தையும் சம்பத்தையும் வளரச் செய்கின்றது. தர்மங்களுக்குள் உத்தம தருமமானது சிவதருமமொன்றே.
சாம்பவனும் மஹாதேவனுமாகிய சதாசிவனே சர்வதேவ சிகாமணியாய் உள்ளவரென்று கூறுவது போலச் சிவதர்மமே சர்வதர்ம மணியாயுள்ளதென்று வேதங்கூறுகின்றது. சிவதர்மத்திலும் மேலாகிய தருமம் வேறொன்றில்லை இது சத்யம் சத்யம் சத்தியமென்று கைதூக்கிக் கூறுகின்றேன். சிவதர்மத்துக்கு வேறாகிய தருமங்களெல்லாம் தருமாபாசமேயாம். ஓ சுரர்களே! அப்படிப்பட்ட சிவதருமத்தை ஆச்ரயிப்பதினால் யாது பயன்? சிவதருமங்களையறியாது உலகில் ஏனைய தருமங்களையே அநுஷ்டிக்கின்றனர். அதனால் யாது பயனடையக்கூடும்? ரத்னமென்று பிரமித்து வளையற்கற்களை வாங்குவானாயின் அதனால் சிறப்பு உண்டா? அன்றியும் தேவாதிதேவனான இறைவனுக்கு எது பிரியமோ அது தான் மேலாகிய தர்மம். அஃதொழிந்த சதாசாரமுதலிய வெல்லாமப்படியல்ல.
அறிந்து சிவதர்மஞ் செய்தால் இதன் பயன் வேதங்களாலுங் கூறமுடியாது. அறியாது செய்த சிவபூசையும் சகலாபீஷ்டங்களையுங் கொடுப்பதாகுமென்று சகல வேதங்களுடைய கருத்து. இச்சிவபுண்ணியத்தினால் சிவகணத்தன்மை பெற்று சிவனுக்கு மிக்க பிரீதிகரனாயிருப்பான். தருமங்களுள் உத்தமமான தர்மமானது சனாதனமாகிய சிவதருமமொன்றே.
சிவரகசியம் மூன்றாம் அம்சம் முப்பதாவது அத்தியாயத்தில் உள்ள சிவதர்ம மஹிமை உரைத்த பகுதியில் இருந்து…