சரம் அசரங்களாகிய உடம்புகளுக்கெல்லாம் சிவபிரான் உயிராதலாலும், உயிரையின்றி உடம்பு இயங்காமையாலும் தனக்கென ஒன்றில்லாதவராகிய சிவபெருமான் தான் போகியாயிருந்து உயிர்களுக்குப் போகங்களை ஊட்டியும், யோகியாயிருந்து உயிர்கள் யோகமாற்றி மெய்ஞ்ஞானம் உற்று உயர்சிவயோகத்தேகமாகி வீடெய்திடச்செய்தும் நிற்பர்.
நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் யோகிருந்துழி வேட்கைக்குக் காரணமாகிய காமன் இருக்கவும் விட்டுணு முதலிய தேவர்கள் இன்பநுகர்ச்சியின்றி மெலிவுற்றதும், மாலயன் அம்மெலிவு கெடும்படி கருதிக் காமனை ஏவுதல்
செய்ய அவனை நெற்றிக்கண்ணை விழித்தெரித்து உமாதேவியோடு அவ்வுயிர்களுக்குப் பேரின்பத்தை அருளிச்செய்ததுமாகிய இந்நிகழ்ச்சியே இதற்குச் சான்றென்க.
இதற்குச்சுருதி,
“போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதல் ஒரார்
சிவஞான சித்தியார்.
யோகியா யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார்
வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரார்
ஊகியா மூட ரெல்லாம் உம்பரின் ஒருவ னென்பர் .”
இவ்வுண்மைகளைச் சிறிதுமறியாது நமது சிவபெருமானை மும்மூர்த்திகளோடு ஒருவனாக வைத்தெண்ணுவோரை நோக்கி
“சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று
நஞ்சம்அஞ்சி
ஆவஎந் தாய்என் றவிதா விடும்நம்
மவரவரே
மூவரென் றேஎம்பி ரானொடும் எண்ணிவிண்
ணாண்டுமண்மேல்
தேவரென் றேஇறு மாந்தென்ன பாவந்
திரிதவரே “
என வாதவூரடிகளிரங்கிக் கூறிய திருவாக்குமறிக.
மதுரை திருஞான சம்பந்த சுவரமிகள் ஆதீன வித்துவான் ஸ்ரீமத் சுப்பிரமணியபிள்ளை அவர்கள் இயற்றிய சைவசித்தாந்த விளக்கம் என்னும் நூலில் இருந்து…