சிவபெருமானது தோடும் குழையும்
வலக்காதில் குழையும், இடக்காதில் தோடும் கூத்தப்பெருமான் அணிந்திருக்கிறார். அதன் குறிப்பு ஆணொடு பெண்ணாய் அமைந்த இவ்வுலகம் தன்னுரு என்பதையும், வையகம் முழுவதும் தன் வடிவு எனப்படுமே என்பதையும் உணர்த்தும் திருக்குறிப்பாம். வலக்காது துடியோசையாகிய ஒலியுலகப் படைப்புக்கு இடம் தந்து நிற்பதையும், இடக்காது அழிவாற்றலை அடக்கியாளுவதாகிய அருளாற்றலையும் அறிவிப்பதே சிவசக்திகளின் தனித்தன்மை என்பதை விளக்குவதாம்.
நீலகண்டம்
இது இறைவனுடைய அருளாற்றலை விளக்குவது என்ற
குறிப்பை,
“ கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ ”என்று மாணிக்கவாசகர் கூறும் திருச்சாழல் பகுதியால் அறியலாம். அன்றியும், அமரர் சாகும் நஞ்சை உண்டும் தான் சாவாமையால் அவருடைய நித்தியத்தன்மையை விளக்குவதும் ஆம்.
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன வெளியீடான ஆடல்வல்லான் என்னும் நூலில் இருந்து…