அறம்பாவமென்னு மருங்கயிற்றாற்கட்டி = புண்ணிய பாவப்பயனென்னும் அரிய கயிற்றினாற்கட்டி.
இதனால் பரமகருணாமூர்த்தியாகிய பரமேசுவரன் ஆணவவிருளில் அகப்பட்டுழலும் ஆன்மகோடிகளை ஆநந்தபரிதர்களாகச் செய்யத் திருவுளங்கொண்டு இருவினையென்னும் பாசக்கயிற்றினாற்கட்டி ஆட்டுவிக்கின்றானென்பதூஉம், அக்கட்டை அவிழ்க்கும்பேராற்றல் அவ்வமல பரமபதிக்கே இயல்பிலமைந்ததென்பதூஉம் பெறப்பட்டது.
ஆகலின் எத்திறநற்பயனும் ஏகநாதனாகிய அம்புலியணிந்த பிரானருளாலன்றி ஆன்மாக்களுக்கு எக்காலத்தும் எவ்விடத்தும் அமையாதென்பது திண்ணம்.
“இரு வினைப்பாசக்கயிற்றின் வழியாட்டுவிப்பானுமொருவனுண்டே தில்லையம்பலத்தே” என்றார் திருவெண்காட்டடிகள்.
இவ்விரண்டு வினைப் பயன்களே ஒவ்வொரு ஆன்மாவையும் எந்தத்தநுவினும் நீங்காதுபற்றிப் பின்றொடர்ந்து செல்லுமாதலால் ” பற்றித்தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே” என்று மீளவும் அவரே வற்புறுத்தியரு ளினார்.
சுவேதாசுவதர உபநிடதமும் “பராச்யாம்ச்ச சர்வர்ந் பரிணாமயேத்ய = பழைய வினைகளையெல்லாம் பக்குவப்பட்ட பருவத்துப் பரிணமிக்கும்படிச்செய்து அவைகளின் பயன்களையளிப்பான்.’ என்று கூறிப் போந்தது. அதனால் ஆன்மாக்களீட்டுஞ் சர்வகன்மங்களையும் அவரவர்களே ஏறாமலுங் குறையாமலும் புசிக்கும்படியூட்டி அவர்களுக்குச் சித்தசுத்தி பிறப்பித்து புலனொடுக்கி மனமடக்கித் தம்மையண்டித் தொண்டுபுரியும் புண்ணியப்பேறுவாய்த்த அவதரத்து,
“ஸர்வஸம்ஸாரபேஷஜம் = சர்வ சம்சாரப் பிணிக்கு மருந்தினர்” என்று தரிசனோபநிடதமும் “சிவயேவஸதாத்யேயஸ் ஸர்வஸம்ஸார மோசக: = சிவபெருமானொருவரே சதா தியானிக்கற் பாலர். சர்வ சம்சார பந்தங்களும் நிவிர்த்தியாகும்பொருட்டு” என்று சரபோபநிடதமும் அறைந்தபடி அவர்களது சம்சாரமென்னுங் கடுங்கானகத்தைக் கொளுத்துங் காட்டுத்தீயைப்போல் பிரகாசித்து நிற்பவன் கருணாநிதியாகிய எம் கண்ணுதற்பிரானென்பது வெளிப்பட்டது. அவனுக்கே வைத்தியநாதன் என்னும் நாமமுண்டு.
ஸ்ரீலஸ்ரீ சிவ அருணகிரி முதலியார் அவர்கள் இயற்றிய திருவாசக விஷயசூசனம் என்னும் நூலில் இருந்து…