சீடன் – சாமி என்பதற் கருத்தமென்ன?
குரு – ‘ஸ்வாமி’ என்னும் வடமொழி, தென்மொழியிற் சாமியென விகாரப்பட்டது. சுவாமியென்றுஞ் சொல்லப்படும்.
ஸ்வம் = சம்பத்து. அதனையுடையான் ஸ்வாமியெனவாம். அந்தச் சம்பத்து, பரம சம்பத்தாகலின் ஆன்மகோடிகட்கு அதனை அருளாலருள் பரமகுருவென்று பொருள் படுத்தப்படும். அதனால், ஆசானென்னு நாமப்பொருளையும் பொருந்தும்.
வேதத்தில் வெளிப்படும் ஆன்ம குகையிலிருத்தலிற் குகனென்னும் பெயர் குமாரனொருவனுக்கே வழங்கப்படுதல் போல இந்தச் சாமியெனும் பெயரும் அவனொருவனுக்கே வழங்கப்படுவதாயிற்று. அதனாலன்றோ சரவணபவனிருக்குஞ் சயிலம் சாமிமலையென விளங்குகின்றது. ஆகலின்,மகேசுரனடியாரை மாகேசுரரெனச் சொல்லுமாற்றாற் போல் சாமியினடியாரைச் சாமிகளெனச் சொல்லலும் மரபே.
இதனை ஏனையோர்க்குச் சொல்லுவதும்,யாதொரு பெயரோடு புனைவதுஞ் சிறப்புண்டாக்கும் பொருட்டே ஆம்.
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சுப்ரமண்ய வியாசத்தில் இருந்து…