ஞானநூல் தனையோதல் ஒது வித்தல்
சிவஞானசித்தியார் – சாதனவியல்-எட்டாஞ் சூத்திரம்(23).
நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா
ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை
ஊனமிலாக் கன்மங்கள் தபம்செபங்கள் தியானம்
ஒன்றுக்கொன் றுயருமிவை ஊட்டுவது போகம்
ஆனவையான் மேலான ஞானத்தால் அரனை
அருச்சிப்பர் வீடெய்த அறிந்தோ ரெல்லாம்
(கொ – டு) ஊனம் இலா கன்மங்கள் தபம் செபங்கள் தியானம் இவை ஒன்றுக்கு ஒன்று உயரும். போகம் ஊட்டுவது. ஆனவையான் ஞான நூல்தனை யோதல், ஓதுவித்தல், நற்பொருளைக் கேட்பித்தல், நன்றாத்தான் கேட்டல், ஈனம் இலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும் எழில்ஞான பூசை. இறைவன் அடி அடைவிக்கும். வீடு எய்த அறிந்தோர் எல்லாம் மேலான ஞானத்தால் அரனை அருச்சிப்பர்.
(பொ-ரை.) இறைவனை வழிபடுகின்ற முறை, சிவதருமோத்தரத்திற் கூறியவாறு கன்மயாகம், தவயாகம், செபயாகம், தியானயாகம்,ஞானயாகம் என ஐவகைப்படும். யாகம் என்பது வழிபாடாம். அவற்றுள் குறைவில்லாத கன்மயாகமாவது விடியஐந்து நாழிகைக்குமுன் எழுந்திருந்து செய்யும் சிவ சிந்தனை முதலாகச் சிவபூஜை அக்கினி காரியம் ஈறாகிய செயல்களாம்.
தவயாகமாவது, சாந்திராயண விரத முதலியவற்றால் சரீரத்தை மெலிவித்தல். செபயாகமாவது, மந்திரங்களை வாசகம், ரகசியம், மானதம் என்னும் முறையில் தத்தம் தகுதிக்கேற்றவாறு செபித்தல். தியான யாகமாவது, இருதய முதலிய தானங்களில் சதாசிவன் முதலிய மூர்த்திகளின் திருமேனிகளைப் பாவித்துத் தியானிப்பது. இந்த நான்கு யாகங்களும் ஒன்றுக்கொன்று உயரும். உயர்தலாவது, பிரபஞ்சப் பற்றுநீக்கத்தைக் குறிப்பதாம். ஆயி’னும் பற்று நீக்கம் அறவே உண்டாகாமையால் அவ்வழிபாடுகள் போகத்தையே கொடுக்கும். போகம் என்பது சாலோகாதி பதமுத்தியாம். இனி ஞானயாகமாவது, ஞான சாத்திரத்தை முன்னொடு பின் மலைவற ஆசிரியனின்றிப் படித்தலும், தான் படித்தபடி பக்குவமுடைய பிறர்க்குப் படிப்பித்தலும், அச்சாத்திரத்துள்ள நன்மையாகிய பொருள்களைத் தமது மதிநுட்பத்தால் ஆராய்ந்து பிறர்க்குச் சொல்லுதலும், இவ்வாறு சொல்லினும் இது ஆராய்ச்சி அறிவேயன்றி யநுபவ அறிவாகாமையால், அவ்வநுபவ அறிவு விளங்கும் பொருட்டு ஞானாசாரியனிடத்து அச் சாத்திரப் பொருளை உபதேச முறையிற் கேட்டலும், கேட்டவாறே குறைவில்லாத அப்பொருளைத் தனித்திருந்து சிந்தித்தலும் என ஐவகைப்படும்.
இவ்வாறு ஐவகைப்பட்ட அழகிய ஞான யாகம் ஒன்றுமே முத்தியைத்தரும். முத்தியடைய விரும்புவோர் யாவரும் மேம்பட்ட ஐவகையான இந்த ஞான யாகத்தினாலேயே சிவபிரானை வழிபடக்கடவர்.
(எ-று)
தெளிதற்கும், நிட்டைக்கும் ஆசிரியன் உபதேசமே யன்றி நூல் வேண்டாமையான், நூலானா கற்பாலனவாகிய ஞான நூல் ஓதல், ஓதுவித்தல், கேட்பித்தல், கேட்டல், சிந்தித்தல் என்னும் ஐந்துமே ஞானயாகமெனப்பட்டது. ஞானாசாரியனிடத்துக் கேட்குமுன்னர்ப் பிறர்க்குச் சொல்லுதல் கூறி யிருத்தலினால், சாத்திரப் பொருளைத் தன்னுடைய நுண்ணறிவால் அறிந்து ‘சொல்லுதல் கூடும் எனவும், அநுபவ முண்டாதற்குரிய அநுசந்தானத்தை ஆசிரியனிடத்து உபதேச முறையால் கேளாதவர் சொல்லாரெனவும் அறிக. உபதேசங்கேட்டு அநுபவம் வந்த பின்னர்ப் பிறர்க்கு உபதேச நெறியைச் சொல்லுங்கால் அச்செயல் நூற்கலப்பால் சிந்தனையுள் அடங்குமாதலின் அக் கேட்பித்தலை வேறு கூறாராயினர், அவ்வுபதேசத்தைச் சிந்தித்தலென்று
கூறினமையினாலேயே, அநுபவம் வந்த பின்னர்ப் பிறர்க்கு உபதேசிக்கலாமென்பது பெறப்படும். அது சிந்தனையுளடங்குமாதலானன்றோ, வருஞ் செய்யுளில் கேட்டலுக்குப்பின் கேட்பித்தல் கூறாது சிந்தித்தலே கூறப் பட்டதென்க.
சாந்திராயணமாவது- அமாவாசை முதல் பௌர்ணமி வரை, உண்ணும் அன்னத்தைப் பதினைந்து பங்காக்கி நாளொன்றுக்கு ஒவ்வொரு பங்காகக் குறைத்துண்ணலும், பௌர்ணமி முதல் அமாவாசை வரை அவ் வாறே கூட்டி உண்ணலுமாம்.
வாசகமாவது – பிறர்க்குக் கேட்கும்படி செபித்தல்.
ரகசியமாவது – தன் செவிக்குக் கேட்கும்படி செபித்தல்.
மானதமாவது—அக்கரங்களை மனத்தால் பாவித்தல். முன்னைய
இரு செபங்களிலும் எண்ணிக்கை கூடும்.
.மானதத்தில் எண்ணிக்கை கூடாது.
சிவஶ்ரீ அருணந்தி சிவாசாரியர் அருளிச்செய்த சிவஞானசித்தியார் சுபக்கம் மூலமும்,உரையும் என்னும் நூலில் இருந்து…
இதற்கு திருக்கைலாய பரம்பரை திருவாவடு துறை ஆதீனத்துத் திராவிட மாபாடிய கர்த்தராகி மாதவச் சிவஞான யோகிகள் அருளிய உரையைத் தழுவி, திருவாவடுதுறை ஆதீன சைவப் பிரசாரகரும் தேவகோட்டை சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கத்துச் சித்தாந்த சாத்திர போதகருமாகிய, தூத்துக்குடி பொ.முத்தையபிள்ளை எழுதிய பொழிப்புரை.