The Harmony Between Vedas and Āgamas: Primary Scriptures of Śaivam


TaHiEnFrEs

வேதம் சிவாகமம் என்னும் இரண்டும் முதனூல்கள் எனவும், சிவவாக்கெனவும் சைவசமயத்தில் கொள்ளப்படும். சிவபெருமான்
ஆன்மாக்கள்மேல் வைத்த கருணையினாலே அவை உணர்ந்து உய்யும்பொருட்டு சதாசிவமூர்த்தியாய் வேதங்களையும்,ஆகமங்களையும் பிரதமசிருட்டி ஆரம்பத்திலே அருளிச்செய்தார்.

வேதம் நான்கும் சதாசிவமூர்த்தியினுடைய தத்புருஷம் முதலிய நான்கு முகங்களினின்றுந் தோன்றியன. ஆகமங்கள் இருபத் தெட்டும் ஈசானமுகத்தினின்றுந் தோன்றியன. வேதம் நீதி நெறியில் நிற்கும் உலகோர் பொருட்டாம். ஆகமம் ஞானநெறியில் நிற்கும் உயர்ந்தோர் பொருட்டாம். வேதம் சூத்திரம் போலவும், ஆகமம் அதன் வியாக்கியானம் போலவும் ஒருவராலேயே அருளப்பட்டமையின் இரண்டும் சமத்துவமுடையன என்பது உணரப்படும்.

“வேதநூல் சைவநூலென் றிரண்டே நூல்கள்
வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள்
ஆதிநூல் அநாதிஅம லன்தருநூ லிரண்டும்
ஆரணநூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம்
நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும்
நிகழ்த்தியது…”

எனச் சிவஞானசித்தியாரும்,

“வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன
நாதன் உரைஅவை நாடில் இரண்டந்தம்
பேதம தென்னில் பெரியோர்க் கபேதமே “

எனத் திருமந்திரமும்,

“உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும்
நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பதும்”
எனத் திருத்தொண்டர் புராணமும் கூறுமாற்றால்
இனிது விளங்கும்.

சிவபெருமான் அருளிச்செய்த வேதங்கள் பஞ்சபூதங்களையும் உயிர்களையும் தேவர்களையும் பிரமமெனக் கூறுவது என்னையெனின்; அழியாத சிவபெருமானைக் குறித்து வேதங்கள் கூறியவை மாத்திரம் விதிவாதமாம்; ஒழிந்தன முகமனாம்.
சதுர்வேதங்களாலும் முதற்கடவுள் எனக் கூறப்பட்டவர் சிவபெருமானே என்னும் உண்மை சதுர்வேததாற்பரிய சங்கிரகம்
முதலிய நூல்களாலே நன்கு உணரப்படும்.

சிவபெருமானாலே திருவாய்மலர்ந்தருளப்பட்ட வேதம், சுயம்பு என வழங் கப்படுவது சுயம்புவாகிய அப் பரமேசுரனாலே செய்யப்பட்ட காரணம் பற்றியேயாம்.

சைவ சாஸ்திர பரிபாலனம்(1940) என்னும் நூலில் இருந்து…(சமய சம்பந்தமான மாத வெளியீடு)

பத்திராதிபர்: யாழ்ப்பாணம் அச்சுவேலி சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்கள்.